
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில், ஒரு மணற்பரப்பில்…
“நம்ம நாலு பேருடைய அம்மா, அப்பாவும் இறந்துட்டாங்க. அவங்க இருந்தாலாவது நமக்கு எப்படியாவது தண்ணி கிடைக்க முயற்சி செய்வாங்க. இப்ப என்ன பண்ணப் போறோம்?” என்று ஒருவன் கேட்டான்.
“எனக்கும் புரியல. நிறைய நாடுகள்ல தண்ணி அளவுக்கு அதிகமா இருக்காமே! வெள்ளம் வந்து சாகிறாங்களாம். விசித்திரமா இருக்கு!” என்றது மற்றொன்று.
“கடவுள் ஏன் இப்படிப் பண்ணனும்? புரியவே இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப தாகமா இருக்கு. நானும் செத்துருவேன் போல!” என்றது மூன்றாவது.
“ஒண்ணு செய்யலாமா? ஒருத்தருக்கொருத்தர் ஓங்கி அடிச்சுக்கலாம். அழுதா கண்ணீர் நிறைய வரும். கொஞ்சம் உப்பாத்தான் இருக்கும். பரவாயில்லை, நக்கி நக்கிக் குடிச்சுக்கலாம்.”
ஒரு குழந்தை மற்றொன்றை அடிக்கக் கையை ஓங்கியது. ஆனால், மனம் வரவில்லை. அப்படியே அதைக் கட்டிக்கொண்டது. இருவருடைய கண்களிலும் கண்ணீர் வந்தது.
இதைப் பார்த்த மற்றக் குழந்தைகளும் பாசப் பிணைப்பில் ஒன்றையொன்று கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டன.
இரண்டு மூன்று நாட்கள் கடந்தன. ஒன்றையொன்று கட்டிக்கொண்டு, பசியும் தாகமுமாக நடக்கக்கூட முடியாமல் தவித்தன. பிறகென்ன? ஆண்டவன் சன்னதிக்குச் சேதி சொல்லப் போய்விட்டனர்.
ஸ்வேதா, வேகமாக லஞ்ச் கூடையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை, இரவு உணவின்போது வீணாகக் கீழே கொட்டாமல் குடித்தாள்.
அன்று மாலை செய்திகளைப் பார்த்தது முதல் அவளிடம் இந்த மாற்றம் ஏற்பட்டது.
