
இளமையில் அந்த நால்வரும் இணைபிரியாத நண்பர்கள். நால்வரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். சூரியன் சுட்டெரிக்கும் பிரதேசம். வெயிலோ, மழையோ, காடு மேடெனச் சுற்றித் திரிந்தவர்கள்.
காலவெள்ளம் அவர்களை ஆளுக்கொரு திசையில் அடித்துச் சென்றது. வெப்பம் தகிக்கும் பிரதேசத்திலிருந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கிச் சென்றனர்.
ஆண்டுகள் பல கழிந்தன.
ஒருநாள், இளமையில் ஒன்றாகக் கூடி மகிழ்ந்த அதே பிரதேசத்தில் மீண்டும் சந்தித்தனர்.
வாழ்க்கையில் அவரவர் தொட்ட உயரங்களை அலசினர்.
முதலாமவன் விஞ்ஞானி. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே நிகழும் அத்தனை மாற்றங்களையும் அறிந்து, இன்னொரு உலகையே படைக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டான்.
இரண்டாமவன் உலகப் பொருளாதாரத்தையே கரைத்துக் குடித்தவன். பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கத் தன்னையே அவை நாட வேண்டும் என்ற தற்பெருமையில் தலைக்கனத்துடன் பேசினான்.
மூன்றாமவன் அரசியல் வித்தகன். எந்த வல்லரசையும் தன்னால் உருவாக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும் என்று தன் ஆளுமையைப் பறைசாற்றினான்.
நான்காமவன் மட்டும் அமைதியாக இருந்தான்.
நண்பர்கள் அவனைப் பார்த்தனர்.
“நான் ஒன்றும் பெரிதாகச் சாதிக்கவில்லை. உலகில் அமைதி நிலவ வேண்டும். அதற்காக என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்றான் அவன்.
அவனுடைய குரலில் தற்பெருமை இல்லை. உறுதி மட்டுமே இருந்தது.
நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அப்போதுதான் அவர்களுக்கு எத்தியோப்பியாவின் இருப்பிடம் புரிந்தது.

சிறப்பான கதை, வாழ்த்துக்கள்.
அருமை.
அருமை.