
“நாம நாலு பேரும் இவ்வளவு வருஷம் கழிச்சு இன்னைக்கு இங்கே பார்ப்போம்னு நினைக்கலடா சாம்!” என்றான் வில்லியம்.
“ஆமாம். எல்லாம் மார்ட்டினோட தங்கையோட ஐடியாதான்!” என்றான் சாம்.
“அப்படியா? அந்தக் குட்டிப் பொண்ணு, நம்மளையே சுத்திச் சுத்தி வந்து, ‘விளையாட்டுக்கு என்னையும் சேர்த்துக்குங்க’ன்னு அழுவாளே! மார்ட்டினும் அவளை வெறுப்பேத்தி ஓடவிடுவானே! அந்தக் குட்டிப் பொண்ணா இவ்வளவு பொறுப்பான காரியம் செஞ்சது?” என்றான் வில்லியம்.
மெட்டில்டா வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள்.
“என்ன வில்லியம் அண்ணா, அறுபது வயசான பிறகும்கூட என்னை வம்பிழுக்கலைன்னா பொழுது போகாதா? எடுத்துக்குங்க, நல்ல ஸ்ட்ராங்கான காபி வித் பிஸ்கட்ஸ். நீங்க எங்க அம்மாகிட்ட கேட்பீங்க இல்லையா? அதுதான்!” என்று சிரித்தாள்.
வில்லியம் சிரித்துக்கொண்டே சாம், மார்ட்டின், டேவிட் ஆகிய மூவரையும் பார்த்து, “என் டேஸ்ட்டை இன்னும் ஞாபகம் வச்சிருக்கா பாரு!” என்றான். பிறகு, “எதுக்கு திடீர்னு இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சே, மெட்டில்டா?” என்று கேட்டான்.
“அதுவா அண்ணா, இந்தப் படம் நினைவிருக்கா? உங்க நாலு பேரையும் நான் வச்சிருந்த புதுக் கேமராவுல அன்னைக்கு எடுத்தேன். இப்ப இதையே மறுபடியும் அப்படியே படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான் உங்க மூணு பேரையும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிச்சு இப்ப இங்கே வரவழைச்சேன்” என்றாள். நீலகிரி மலைத்தொடரின் அழகான மேக வரிசையைப் பார்த்தபடி.
“இவ்வளவு வித்தியாசமான ஆசைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கே! ஆளுக்கு ஒரு நாட்டுல இருக்கோம். சொல்லப்போனா, பத்து வருஷத்துக்கும் மேலாகத் தொடர்பில் இல்லாம, வேலை, பொறுப்பு, பணம்னு இயந்திர வாழ்க்கை வாழ்ந்துட்டிருந்தோம். உன்னால நிஜமான சந்தோஷத்தை இன்னிக்கு அனுபவிக்கிறோம்.”
“அதுக்குத்தான் அண்ணா, நல்ல ஆசை நல்லதைப் பெருக்கும்னு சொல்வாங்க. பாருங்க, என் ஆசை உங்க எல்லாரையும் மறுபடியும் இணைச்சிடுச்சு!” என்றாள் மெட்டில்டா சிரித்துக்கொண்டே.
