எம்.எல். பிரபா/நால்வர்

முத்து, கோபால், ரகு, மணி ஆகிய நான்கு பேரும் அனாதைகள். முனியம்மாள் ஒரு பெரிய வீட்டில் வேலை செய்து, அவர்களைக் காப்பாற்றி வந்தாள்.

திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால், இரண்டு நாட்களுக்கு முன்பு முனியம்மாள் இறந்துவிட்டாள். பாவம், நால்வரும் மீண்டும் அனாதைகளாகிவிட்டார்கள்.

பாட்டி வேலை செய்த அந்தப் பெரிய வீட்டிற்கே இவர்களும் சென்று வேலை கேட்டார்கள். அந்த வீட்டு எஜமானரோ, சின்னப் பசங்களுக்கு என்ன வேலை கொடுப்பது என்று யோசித்தார்.

“நீங்கள் தினமும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்டு வர வேண்டும். மாலையில் மட்டும் வந்து, சின்னச் சின்ன வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் பாருங்கள். உங்களுக்குச் சம்பளம் தருகிறேன். இரவு உணவும் தருகிறேன்” என்றார்.

மறுநாள் நால்வரும் வேலைக்கு வந்தார்கள். மணி மட்டும் வாசலில் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரம் சென்றதும், அவன் உள்ளே எட்டிப் பார்த்தான். மேஜை மேல் இருந்த ஆப்பிள் அவனது ஆசையைத் தூண்டியது. உடனே ஓடிச் சென்று ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

அதை முத்து பார்த்துவிட்டான். அவன் அதைத் திருப்பி வைப்பதற்குள் எஜமானர் வந்துவிட்டார்.

“யார் பழத்தை எடுத்தது?” என்று கேட்டார்.

முத்து, மணியைக் காட்டிக்கொடுக்காமல், “நான்தான் எடுத்தேன்” என்று சொன்னான்.

“முதல் நாளிலேயே திருடுகிறாயா?” என்று கூறி முத்துவை அடித்தார்.

அதைப் பார்த்த மணிக்குத் தன் தவறு புரிந்தது. அழுதான். கோபாலும் ரகுவும் எஜமானரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள்.

மணியும், “இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன், ஐயா!” என்று மன்னிப்புக் கேட்டான். அவரும், பாவம் என்று மன்னித்துவிட்டார்.

நால்வரும் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு, சந்தோஷத்துடன் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன