
காலையிலிருந்து விடாமல் மழை கொட்டித் தீர்க்கிறது. விமலா இரண்டு நாட்களாகத் தீபாவளிக்குப் புதுப் புடவை வாங்கித் தருமாறு கணவர் ராமுவைக் கெஞ்சிக்கொண்டிருந்தாள். அவர் அதைக் காதில் போட்டுக்கொண்டால்தானே!
“விடாமல் கேட்கிறேன். உங்களுக்கு நிஜமாகவே காது கேட்கவில்லையா?”
ராமுவிடமிருந்து பதில் இல்லை. கையில் பணம் இருந்தால்தானே!
“என்னங்க, ஒரு சாதாரண வாயில் புடவை போதுங்க!”
விமலா விடுவதாக இல்லை.
“சரி, வா!”
சட்டென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு குடையை விரித்தார். வீட்டில் இருப்பதோ ஒரே ஒரு குடைதான். அவர் வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவள் பின்னால் மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தார் ராமு. என்ன தோன்றியதோ, பின்னால் திரும்பி அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, அவள் மழையில் நனையாதவாறு குடையைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினார்.
கல்யாணமாகி முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. வெளியில் செல்லும்போது இன்றுதான் இப்படி அன்போடு அணைத்தார் ராமு. விமலா பூரித்துப்போனாள். புதுப் புடவை வாங்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு மழை நாளில் இவரைக் கட்டி அணைத்தபடி வெளியில் சென்றாலே போதும்!
மழைத்துளி அவள் மேல் விழுந்தது, அவளுக்குப் பூமாரி பொழிந்தது மாதிரி இருந்தது.
