
எல்லாம் சரியாக இருக்கிறது
உலகில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
உலகின் ஏதோ ஒரு மூலையில்
பெண்களுக்கு கல்வி மறுக்கப்படலாம்
உலகெங்கும்
தினம் தினம்
ஏதோ ஒரு கணக்கில் பெண்கள்
பாலியல் வன்முறைக்கு
ஆளாகிக்
கொண்டிருக்கலாம்
அதனால் என்ன
எத்தனையோ நாடுகளில் பெண்கள் தலைமை
பொறுப்பில் இருக்கிறார்களே
நம் நாட்டின்
ஏதோ ஒரு மூலையில்
ஒருவன் தன் மனைவியை விற்று
கைப்பேசி வாங்கி இருக்கிறான்
அதனால் என்ன
நம் நாட்டில்
நாம்
பெண்களை
தாயாக
தெய்வமாகத்
தொழுகிறோமே
பாதுகாப்பு உறை இன்றி அடிக்கடி
ஒரு தொழிலாளி சாக்கடைக்குள்
உயிர் விடுகிறான்
அவன் என்றுமே
‘மேல்’ எனப்படும்
ஜாதியில் பிறந்தவனாக இருப்பதில்லை
அதனால் என்ன
நாம் தான் தெருக்களின் பெயர்களில்
ஜாதியை ஒழித்து விட்டோமே
போதாக்குறைக்கு ஒதுக்கீட்டு முறை வேறு
திறமையின் மதிப்பை குறைத்துக் கொண்டு
நான் சாப்பாட்டு மேஜையில்
மின்விசிறியின் கீழ் அமர்ந்து
சிற்றுண்டி சாப்பிடுகையில்
சமையலறை தரையிலமர்ந்து
தன் தேநீரை
அவளுக்கென வைத்திருக்கும் கோப்பையில்
அருந்துவாள்
என் சமையற்காரி
எனக்கு தயாரிக்கும் போதெல்லாம்
அவளுக்கும் உண்டு ஒரு வாய் தேநீர்
வர்க்க பேதம் பார்ப்பவளில்லை
நான்

இன்றைய விருட்சம் நிகழ்வில் வாசித்து பாராட்டுகளைப் பெற்ற கவிதை! சிறப்பாக உள்ளது!
அவளுக்கென வைத்திருக்கும்
தேநீர் கோப்பை….
வெள்ளைவேட்டியில் தெரியும்
கரும்புள்ளி.