அப்பர் கிளிக்கண்ணிகள்/அ.கி.வரதராசன், சிங்கப்பூர்

இச்சையால் நீறுதன்னை
என்றும் அணிபவர்க்கு
அச்சன் அருள்வானடி, கிளியே,
அறிந்து பகர்ந்தாரடி (1)

அன்புடன் நீறுபூசி
அண்டிப் பணிபவர்கள்
இன்பம் உறுவாரடி, கிளியே,
ஏத்தி உரைத்தாரடி (2)

நாதனின் நாமமன்றி
நாவுரை வேறில்லை
போதனை செய்தாரடி, கிளியே,
புகன்றதும் உண்மையடி (3)

ஆண்டவன் பேரருளில்
ஆழ்ந்து திளைத்ததனால்,
தாண்டவம் தந்தாரடி, கிளியே,
தன்னிகர் இல்லாரடி (4)

ஒப்பில்லா நேரிசைகள்
ஓங்கி உரைத்தவராம்
அப்பர் பெருமானடி, கிளியே,
அறிந்து பணிவாயடி (5)

அப்பர்தம் தோளின்மீது
அண்ணல் இலச்சினையை
ஒப்பிப் பொறித்தானடி, கிளியே,
உணர்ந்து தொழுவாயடி (6)

சொற்றுணை என்று கொண்டு
சொல்லுவாய் அஞ்செழுத்தை,
நற்றுணை ஆகுமென்று, கிளியே,
நன்மை உரைத்தாரடி (7)

கல்லுடன் மேனிதன்னைக்
கட்டிக் கடலிடினும்
வெல்லுவேன் என்றாரடி, கிளியே,
விளம்பினார் நாமமடி (8)

நாவினின் வேந்தரென
நாதனே சொன்னவரின்
பாவினை ஓதுவதால், கிளியே,
பாவம் தொலையுமடி (9)

பாம்பு விடத்தைமாற்றிப்
பையனுயிர் மீட்டவர்சீர்
ஓம்பி உரைப்பாயடி, கிளியே,
ஒப்பிவர்க் கில்லையடி. (10)

நாவுக் கரசரென
நாதனே சொன்னவர்பா
நாவுக் கினிமையடி, கிளியே,
நாளும் உரைப்பாயடி. (11)

கயிலையின் காட்சிதன்னைக்
கண்டறி யாதவண்ணம்
ஒயிலிலே கண்டாரடி, கிளியே,
உவந்தரன் ஈந்தானடி. (12)

நஞ்சை அமுதுசெய்த
நாதனின் சேவடியில்
தஞ்சம் அடைந்தாரடி, கிளியே,
தலையதில் வைத்தாரடி. (13)

பெண்ணொரு பாகனாரை,
பேயுடன் ஆடுவாரைக்
கண்ணிலே வைத்தாரடி, கிளியே,
களிப்பில் திளைத்தாரடி. (14)

சோற்றுப் பொதியுடனே
சோதியான் காத்திருந்த
ஏற்றம் உடையாரடி, கிளியே,
ஏத்திப் பணிவாயடி. (15)

நீற்றறை உள்ளேதள்ளி
நீசர் அடைத்தபோது,
சாற்றிய அஞ்செழுத்தால், கிளியே,
சாவு தவிர்த்தாரடி. (16)

சொல்லுக்கு வேந்தரென
சொக்கனே சொன்னபோதும்
பல்லக்குத் தூக்கிடுவார் – கிளியே,
பணிவின் சிகரமடி (17)

3 Comments on “அப்பர் கிளிக்கண்ணிகள்/அ.கி.வரதராசன், சிங்கப்பூர்”

  1. என் கடன் பணி செய்து கிடப்பதே- என்ற தலைப்பில் அறிஞர் அ.கி.வ. அவர்கள் ஆஸ்திரேலிய ஜூமரங்கில் அண்மையில் ஆற்றிய அற்புதமான உரையின் இறுதியில் அவரே தம் இனிய குரலில் பாடிய பாடல்தான் இது!

    வெளியிட்ட அழகிய சிங்கருக்கு நன்றி!

  2. நெற்றியில் நீரு
    நெஞ்சினில் கனல்
    ஈசனடி சேர்ந்து விட்டால்
    குளிர் நிழல் தருமே
    எந்தைதனை காணும்
    விந்தை புரிந்திடுவாய் குதம்பாய் .

    சிறப்பு.

Comments are closed.