நகுலனைப் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகள்

கீரிப்பிள்ளை

நெடு நேரப் பேச்சுக்குப் பிறகு
கொல்ப் மைதானத்தில் கேரள
மின்விளக்குகள் மங்கலாக விழித்திருக்க
பாம்பென்றால் உங்களுக்குப் பயமா’ என்றார்நகுலன்
பயப்படமாட்டேன் என்பதே புருஷ லட்சணம் ‘
இருக்கிறது – ஆனால் ஒளிந்திருக்கிறது
என்றால்தான் மனிதன் அஞ்சுவான்
ஒளிந்திருப்பதை அவனுக்குப் பிடிக்காது என்றேன்
எனக்கும் பாம்புக்கும் இடைப்பட்ட தூரமும்
ஒரு காரணம் ஆகும் என்றேன்
சூரல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த
மூத்த படைப்பாளியின் வதனம் தெளிவாக இல்லை
எனது வீட்டில் ஒரு பாம்பு இருக்கிறது
நானே பார்த்தேன். வாழும் பாம்பாம்
நல்ல பாம்புகள்தான் என்றாலும்
யாரையும் கடிக்காத நோன்புடையவை என்றார்
ஒருமுறை நவீனனைப் பற்றி நான்
எழுதிக் கொண்டிருக்கும் போது
வாழும் பாம்பு போனதைப் பார்த்தேன் என்றார்
நகுலன் வீட்டு முன்வாசலில் ஒரு மரம்
அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தது
அதன் விரலில் தொங்கியது பாம்பின் சட்டை
காலை இளம் வெயிலில் பளபளத்தது
தெரியுமா? ஸம்ஸ்கிருதத்தில்
நகுலன் என்றால் கீரிப்பிள்ளை .