வாசிக்க வாசிக்க,
வாசிக்கத் தூண்டும்\\\
நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது சமீபத்திய சாகசம் நவீனவிருட்சம் தினசரி இலக்கிய இதழ்.
சோதனை முயற்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அவர் நீள் கவிதையும் எழுதுவார்,குறுங்கதைகளும் எழுதுவார்.தன் புனைவு நாவல் கொண்டுவருவார்.புதிது புதிதாய் எழுதுவது அவருக்கு அளவு கடந்த உற்சாகம் ஊட்டுவதாய் தோன்றுகிறது.அவரது அஞ்சல் அட்டைக்கதைகள் இதற்கு இன்னுமொரு உதாரணம்.பிரபல ஏடுகளில் flash fiction எனப்படும் குறுங்கதைகளைப் படித்து சலித்துப் போயிருக்கும் வாசகர்களுக்கு அவரது குறுங்கதைகள் சுவாரஸ்யம் கூட்டுபவை.இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.அவர் எழுதி வெளிவந்த துளிகள் 1-தொகுப்பின் தொடர்ச்சியாக இப்போது துளிகள் தொகுதி -2 வந்திருக்கிறது.
கட்டுரை (பெரிதோ/சிறிதோ)படிக்க ஒரு மனநிலை வேண்டும்.ஆனால் படிக்கத் தொடங்கியவுடன் அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அழகியசிங்கரின் எழுத்து நடை எந்த மனநிலையிலும் வாசிக்கத் தகுந்தது என துணிந்து சொல்லலாம்.’துளி’ என்ற தலைப்பில் மிகச் சிறிய வடிவத்தில் எழுதுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதி உள்ளேன் எனும் அவரது வாக்கு மூலத்திற்குச் சாட்சியாய் அனைத்துப் பக்கங்களும் இருக்கின்றன.சில கட்டுரைகள் இரண்டு பக்கங்கள் மற்றும் சில கட்டுரைகள் ஒரு பக்கம் என சின்னஞ்சிறு கட்டுரைகள் கொண்ட, வாசிப்பிற்குத் தடங்கல் ஏற்படுத்தாத தொகுப்பாக துளிகள்-2 வந்திருக்கிறது.இன்னும் தொடர்வார் என எதிர்பார்க்கும் நேரத்தில் கட்டுரை சட்டென்று முடிவுக்கு வருகிறது.
அழகியசிங்கரை கி.ரா.வின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு புத்தகக் காதலர் எனச் சொல்லலாம்.ஏனைனில் பெரும்பாலான பக்கங்களில் புத்தகங்களைப் பற்றியே எழுதுகிறார்.”இந்த விலைக்கு கிடைக்கவே கிடைக்காது” எனும் தலைப்பில் அவர் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரை அவரின் புத்தகக் காதலை மிக எளிதாக காட்டிக்கொடுத்து விடுகிறது.ஏ.கே.கோபாலன் பதிப்பித்த 849 பக்கங்கள் கொண்ட பாரதியார் கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள் அடங்கிய தொகுப்பைக் கண்டவுடன் அவர் இவ்வாறு எழுதுகிறார்.”பாரதி முழுவதும் கைக்கு வந்து விட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது.இந்த புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறேன்”.
புத்தகக் காட்சி குறித்து இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் அவர் கொண்டு வந்த புத்தகங்கள் பற்றி,அரங்கு வாடகைக்கு எடுத்தது பற்றி,புத்தக அரங்கிற்கு வரும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி பேசுகின்றன.அவரது புத்தகக்காட்சி நினைவு -5 என்ற சின்னஞ்சிறு கட்டுரையில்,”விற்பவன்,பதிப்பாளன்,எழுதுபவன் எல்லோரும் ஒரே நபராய் இருந்தால் ஆபத்து.அதுவும் கவிதை எழுதுபவனாய் இருந்தால் இருந்தால் கூடுதல் ஆபத்து”என எழுதுகிறார்.
இந்த கட்டுரைகளில் அவ்வப்போது வெளிப்படும் எள்ளலும் துள்ளலும் தான் மேலும் மேலும் இந்த கட்டுரைகளைப் படிக்கத்தூண்டுகிறது.எலிசபெத் கில்பர்ட் ஈட், பிரே,லவ் எனும் சுயசரிதம் பற்றி அவர் எழுதுவது அவர் எழுத்தில் வரும் எள்ளல் தொனிக்கு ஒரு சாட்சி மட்டுமே.
“உலகம் முழுவதும் இந்தப்புத்தகம் 6மில்லியன் பிரதிகள் விற்றிருக்கிறது.1மில்லியன் என்றாலே பத்து லட்சம்.6மில்லியன் என்றால் 60லட்சம் பிரதிகள்.நினைத்தே பார்க்க முடியவில்லை”
இப்படி என் புத்தகம் ஒன்று விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.நான் அதை அச்சடிப்பதற்கும் அனுப்புவதற்கும் திண்டாடிப் போய்விடுவேன்.
இந்த தொனி பெரும்பாலான கட்டுரைகளில் இடம் பெறுவது கட்டுரைகளுக்கு வேறு பரிமாணத்தை வழங்குவதோடு வாசிப்பை சலிப்பற்றதாகவும் ஆக்குகிறது.
தொகுப்பில் இடம்பெற்ற குறிப்புகள் எல்லாம் தேதிவாரியாக தொகுக்கப்பட்டிருப்பதால் இந்தத் தொகுப்பை,”ஒரு டைரி குறிப்புகளாகக் நாம் எடுத்துக்கொள்ளலாம்”என்கிறார்.தனிப்பட்ட விசயங்கள் இத்தொகுப்பில் உண்டு.ஆனால் அந்தரங்க விசயங்கள் ஏதுமில்லை.பெரும்பாலான இடங்களில் எழுத்தாளர்கள்&புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்,அவர்களின் நிலைப்பாடு மற்றும் மரணம் பற்றிய செய்திகள் இடம் பெறுவதால் ஒரு எழுத்தாளரின் டைரிக் குறிப்பாகக் கருதலாம்.சான்றாக தீபாவளி மலரும் நானும்…2 கட்டுரையில் எழுத்தாளர் ஐராவதம் புறக்கணிக்கப்பட்டது பற்றிய அங்கலாய்ப்பு தெரிகிறது.கூடவே”ஐராவதம் உலக இலக்கியமெல்லாம் அறிந்தவர்.சிறந்த சிறுகதை ஆசிரியர்.ஏன் சம்பத் என்ற எழுத்தாளரை விட சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவரை யாரும் கொண்டாடவில்லை……ஆனால் ஒரு போதும் இது குறித்து அவர் பொருட்படுத்தியது இல்லை”என சிறுமதிப்பீடும் இடம் பெறுகிறது.
வாசிக்க வாசிக்க வாசிக்கத் தூண்டும் துளிகளின் தொகுதிகள் அடுத்தடுத்த தொகுதிகள் வரும்போது அழகியசிங்கர் எழுத்தாளராக,பதிப்பாளராக,புத்தகக் காதலராக இருந்த கதை மட்டுமல்லாமல் அவரின் வாழ்க்கையின் பயனுள்ள சில பக்கங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.”ஒருவர் இதை எடுத்து வாசித்தாரென்றால் கீழே வைக்கமுடியாது.அந்த அளவிற்கு சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது”என துளிகள்-1 பற்றி அவர் எழுதியிருப்பது துளிகள் தொகுதி -2 க்கும் பொருத்தமானதாக இருக்கிறது.

அமைதியாக இலக்கியப்பணி செய்து கொண்டிருப்பவர்களையும் கவனிக்கிறார்கள் என்பது அதங்கோடு அனீஷ்குமார் எழுதிய கட்டுரை வழியாகத் தெரிகிறது.. என்ன தான் தேர்ந்த இலக்கியரசனை, எல்லோரையும் அங்கீகரிக்கும், கொண்டாடும் பிரபஞ்சத்தன்மை கொண்ட அணுகுமுறை கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலான இலக்கியவாதிகள் குழு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கு சரியென்று தோன்றுகிறதை செய்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறவர் அழகிய சிங்கர்.. இதற்காக தனது பொருளையும், உழைப்பையும் தருகிறார். சி.சு.செல்லப்பாவுடையது ஒரு வகையிலான பங்களிப்பு என்றால் அழகிய சிங்கருடையது இன்னொரு வகையிலானது.. காலமும், சூழ்நிலையும் தான் வேறு வேறு…….. ப.சகதேவன்