திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதியார் எழுதியுள்ள பாடல்

இனிக்கும் தமிழ் – 68

– டி வி ராதாகிருஷ்ணன்

தென்றல் காற்றினை மாணவனின் செய்கையுடன் ஒப்பிடுகிறார்.

தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
உள்ள குளத்தில் குதித்து கொஞ்சம் குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளும். அந்த
குளத்தில் உள்ள தாமரை மலரை தொட்டு தடவி அதன் மணத்தையும் தேனையும்
எடுத்துக் கொள்ளும். பின் அங்கிருத்து கிளம்பிப் போய் மல்லிகை,
இருவாட்சி, முல்லை போன்ற மலர்களின் நறுமணத்தை எடுத்துக்
கொள்ளும்…இப்படி குளிர்ச்சியையும், நறு மணத்தையும், தேனையும் சுமந்து
கொண்டு இதமாக வீசும் தென்றல் காற்று … இது..பல பல இடங்களில் சென்று
பலவிதமான அறிவை பெரும் மாணவனை போல் இருக்கிறதாம்…..

பாடல்

பொங்கரி னுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்துமெல் லென்று தென்றல்
அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்கு மன்றே.

பொங்கரி னுழைந்து = பொங்கரில் நுழைந்து = சோலையில் நுழைந்து

வாவி புகுந்து = குளத்திற்குள் புகுந்து

பங் கயந்து ழாவிப் = தாமரை மலரை தடவி

பைங்கடி = பசுமையான

மயிலை = இருவாட்சி (ஒரு வித மலர்)

முல்லை = முல்லைபூ

மல்லிகைப் = மல்லிகை பூ

பந்தர் தாவிக் = பந்தல் எல்லாம் தாவி தாவி சென்று

கொங்கலர் = மகரந்தங்களை கொண்டு மலர்ந்த பூக்களின்

மணங்கூட் டுண்டு = நறுமணங்களை சேர்த்து எடுத்துக் கொண்டு

குளிர்ந்து = குளிர்ச்சியுடன்

மெல் லென்று = மென்மையாக

தென்றல் = வீசும் தென்றலானது

அங்கங்கே = பல இடங்களில்

 கலைக டேரு = கலைகள் + தேறி = கலைகளில் தேர்ச்சி பெற்று

மறிவன்போ லியங்கு மன்றே.= அறிவன் + போல் + இயங்கும் + அன்றே = அறியும்
மாணவைப் போல் இயங்கும்

                         

ReplyForward