விருட்சம் நினைவுகள் 10/அழகியசிங்கர்


சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

அதேபோல் சிறுபத்திரிக்கையில் எழுதியவர்கள் பெரிய பத்திரிகைக்கு மட்டும் மாறுபவர்களாகப் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சுஜாதா, பாலகுமாரன் சிறுபத்திரிகையில் எழுதியவர்கள். 

சுஜாதாவின் ஒரு கதை ‘தனிமை கொண்டு’ முதன் முதலில் நகுலன் தயாரித்த குருஷேத்ரம் இலக்கியத் தொகுப்பில் வெளிவந்தது.

க.நா.சுவுடன் ஒரு கட்டுரை வாங்கிப் போட வேண்டுமென்று நினைத்து மைலாப்பூரில் உள்ள க நா சு வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அவர் உடனே எழுதி வைத்த ஒரு கட்டுரையைக் கொடுத்தார். அந்தக் கட்டுரையின் பெயர் ‘புதுக்கவிதையின் எல்லைகள்’ என்று.   விருட்சத்திற்காக க நா சு கொடுத்த அக் கட்டுரையை இப்போது எடுத்துப் படிக்கிறேன்.   

அதை ஏன் பிரசுரம் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இரண்டாவது இதழிலிருந்து கோபி கிருஷ்ணன் விலகினாலும், மற்றவர்களுடன் சேர்ந்து படைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன்.  அதில் க நா சு கட்டுரையையே மற்றவர்கள் வேண்டாம் என்றார்கள்.  ஞானக்கூத்தனுக்கு அக் கட்டுரை விருட்சத்தில் பிரசுரம் ஆகவில்லை என்பதில் வருத்தம்.  அதன்பின் அவர் அக் கட்டுரையை  ழவின் கடைசி இதழான 28 ல் பிரசுரம் செய்தார். 

 இது சிறு பத்திரிகையில் பெரிய பிரச்சினை.  பலர் சேர்ந்து முடிவெடுக்கும்போது பல நல்ல படைப்புகளை நாம் விட்டுவிட வேண்டும். ஒன்றிரண்டு இதழ்களுக்குப் பிறகு விருட்சம் என் பொறுப்பில் வரத் துவங்கியது. 

இன்று தனி மனிதனாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்.    அக் கட்டுரையில், ‘புதுக்கவிதை என்று சொல்லும்போது ஷண்முகசுப்பையால, நகுலன், ஞானக்கூத்தன், இவர்களோடு மயன் (நான்) ஏற்படுத்தித் தந்த ஒரு மரபு சோதனைக்கட்டத்தைத் தாண்டி கவிதை என்கிற கட்டத்தை எட்டி விட்டது,’ என்கிறார். இதை அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் நாங்கள் யோசித்து இக் கட்டுரையைப் போடக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

இதை ஞானக்கூத்தனிடம் தெரிவித்தபோது, அவருக்கு என் மீது கோபம்.  அவர் கட்டுரையில் அவருடைய கருத்தைத் தெரிவிக்கிறார்.  அதைப் பிரசுரம் செய்யாமல் விடுவது தவறு,’ உண்மையில் இந்தத் தவற்றை நான் செய்திருக்கக் கூடாது.  க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர். .  ஆனால் என் தவற்றை ழ பத்திரிகையில் பிரசுரம் செய்ததிலிருந்து சரி செய்து விட்டார்.  

ஒரு துயரமான நிகழ்ச்சி நடக்காமலில்லை.  க நா சு அந்தத் தருணத்தில் தில்லியில் இறந்து போனதுதான் அந்தத் துயரமான நிகழ்ச்சி.  இந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் போய்விட்டேனே என்ற வருத்தத்துடன் க நா சு ஓவியத்தை வெளியிட்டு 3வது இதழ் விருட்சம் கொண்டு வந்தேன். 

க நா சு தன் கட்டுரையில் ஒரு இடத்தில், ‘பிச்ச மூர்த்தி, கண்ணதாசன் இருவரும் விஷய எல்லைகளைப் பழைய அளவில் ஏற்றக்கொண்டதாலேயே கவிதை என்று செய்தாலும் அவர்களுக்குக் கவிதை கை வரவில்லை என்று சொல்ல வேண்டும்,’ என்று குறிப்பிடுகிறார்.   என்றெல்லாம் க நா சு எழுதியிருப்பதால், அக் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும், க நா சு என்ற மூத்த எழுத்தாளர் கொடுத்த ஒரு கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் விட்டது தவறு என்று இப்போதும் உணருகிறேன்.  அதை நிவர்த்திச் செய்யும் விதமாக ழ பத்திரிகையில் வெளிவந்ததை மீள் பிரசுரமாக விருட்சம் இதழில்  திரும்பவும் பிரசுரம் செய்யலாமென்று நினைக்கிறேன்.  இதோ 107வது இதழ் விருட்சத்தில் பிரசுரம் செய்ய உள்ளேன்.           (இன்னும் வரும்)

3 Comments on “விருட்சம் நினைவுகள் 10/அழகியசிங்கர்”

Comments are closed.