
எழுத்தாளரின்
மனைவியாய்
வாழ்க்கைப்படுவது
சௌகர்ய அசௌகர்யங்கள்
ஒருசேர
உள்ளடக்கிய வரச்சாபம்.
கிழித்துப்போடப்படும்
எழுத்துத் தப்பிதங்கள்
குப்பைக்கூடையுள் முற்றாய்
போனதாய் சரித்திரமேயில்லை.
சுற்றுப்புறத்தில் வட்டமடிக்கும்
அவை யாவும்-
மின் விசிறிக்காற்றில்.
எழுது மேஜையின்
நட்ட நடு ஒழுங்கீனங்கள்
படுகளத்திற்கு இணையெடுப்பன.
அவித்த வேர்க்கடலை,
மிக்சர், பக்கோடாத் துண்டுகள்
கீழே சிந்துதலுறாமல்
இதழடைந்த வாய்ப்புகள்
எத்தனை குறைவோ
அதுபோன்ற தலைவிதிதான்
ஆறிப்போய்விடுகிற
காப்பிக்கும் டீக்கும்
நேர்ந்து விடுகிறது எப்போதும்.
உண்பது, உறங்குவது,
குளிப்பது,
முக,சிகை அலங்காரங்கள்,
உடைமாற்றம்
இன்னபிற
தோற்றநிலை மாற்றுதல்கள்
முழுநேர எழுத்தாளனின்
கடிகாரச் சுழற்சி மறுதலித்து
பிரதான பின்னடைவு நிலைகளிலேதான்
மையமுறும் தினம்தினமும்.
இந்த முறையும்
அந்த பத்திரிகை
என் படைப்பை போடவில்லை
எனும் வருத்தம் ஒரு புறமானால்
என் படைப்பை
இஷ்டத்துக்கு கத்தரித்துவெளியிட
இவன் யார் எனும்
உறுமல் ஒருபுறம்.
மூணுமாசமாச்சு
பிரசுரம் பண்ணமுடியாதுன்னா
படைப்பை
திருப்பியனுப்பினா
கொறஞ்சா போய்டுவான்
எனும் கோபம் ஒருபுறம்.
உறவுக்காரர்களின் வருகை,
உதாசீனங்களை விட
எழுத்துலக மாந்தர்களின்
வருகையும் உதாசீனங்களும்
இடறிவிடாத தினப்படிகளுண்டா
எழுத்தாளனின் வீடுகளில்?
சாற்றிய சந்தன மாலைகள்
போர்த்திய சால்வைகள்
படச் சட்டப் பட்டயங்கள்
பரிசுக் கோப்பைகள்
நினைவுப் பரிசுகள்
ஒரு புறமிருப்பினும்
அலையலையாய் குவிபடும்
புத்தகங்கள் வீட்டில் நெரிபடுவது
எழுத்தாளர் மனைவியின்
கவலை நிலை கடைசிப் பக்கங்கள்.
அரசாங்க உத்யோக அந்தஸ்து,
சுயதொழில் முனைப்பு நிலை,
நிலம் நீச்சு வருமானம்,
மனதளவில் நிம்மதியாய்
நிகழ்ந்தேறும் மற்றையோர்போல்
எழுத்தாளனின் மனைவிக்கெனில்
நிகழ்வதில்லையென்றாலும்
புனைபெயருக்கு தன் பெயரையும்
எழுத்தங்கீகார ஏற்புரைகளில்
நிகழுறும் துணைக்குறிப்பு
நன்றி நவிலல்களில்
மனைவி பெயர் வலமுறுவதும்
வரமின்றி சாபமோ
ஒருவேளை?!
எழுத்தாளரின்
மனைவியாய்
வாழ்க்கைப்படுவது
சௌகர்ய அசௌகர்யங்கள்
ஒருசேர
உள்ளடக்கிய வரச்சாபம்..!

அருமை. நிஜத்தை மிக இயல்பான வார்த்தைகளில் கவிதை பதிவு செய்கிறது.