கிணறு/நா.விச்வநாதன்

கிணறு-
அப்புறம்
இரண்டொரு
செம்பருத்திகள்
கொஞ்சம் முட்புதர்
என்றிகிருக்கிறது
கொல்லை.

அம்மா வந்தபோதும்
இருந்ததாம்
பாட்டி வந்தபோதும்
இருந்திருக்கலாம்.

தண்ணீர் இறைக்கும்போது
எழும்சப்தம்
சங்கராபரணம்.
சிலநேரம்
சிம்மேந்திர மத்தியமம்

குனிந்து பார்த்தால்
வஞ்சனையற்று
எல்லார் பிம்பங்களும்
தெரியும் நேசம்

காக்கைகளின்
கரகரப்பும்
சிட்டுக்குருவிகளின்
கொண்டாட்டமும்
அற்புதமான கவிதை.

அணில்
துள்ளித் தாவும்
கொய்யா மரம்
வெட்டப்பட்ட போது
அம்மா போய்ச் சேர்ந்தாள்
அப்புறம்
சைகை ஒலியோடு
அனைத்தும்போயின.

கொல்லையிலிருந்த
இடம் வெறுமையாய்
என் வீடு போல

என்போல