கால்நனைத்தவனிடம் கதைகேட்டவன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )

“நீயே போயிருவியா  பா … அப்பா வரணுமா ” 

“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய  சீருடையின் புதுமணத்துடன் .

திருநா என்ற திருநாவுக்கரசுக்கு  இதுவொன்றும் புதிதில்லை  .. இந்த பத்தாம் வகுப்புக்குள் அவன் மூன்று பள்ளிக்கூடம் மாறியாயிற்று .. அப்பாவுக்கு அரசாங்க வேலை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் தவிர்க்கமுடியாததுதான் ..

வாசலிலேயே வழிமறித்தார் வாட்ச்மேன் அங்கிள் .. “என்ன??  நியூ அட்மிஷனா ??”   என்று அவன் புருவத்திற்கு மத்தியில் திண்ணமாக இட்டிருந்த திருநீற்றுக்கீற்றை பார்த்தவாறே கேட்டார்

ஆமாம் என்றான் 

“எந்த பிரிவு”    என்றார்  ..  “10th  – C ” என்றான்  ..

“அதோ அந்த மாடிப்படிக்குக்  கீழேதான் “என்று திசைக் காட்டினார்

நிமிர்ந்து பார்க்கிறான்  ..  உறுதியான மூன்றடுக்குக்  கட்டிடம் சீருடைப்  போலவே மேலே வெள்ளையும் கீழே கருநீல  வர்ணம் பூசியிருந்தார்கள் …  மொட்டைமாடியில் கட்டிடத்துக்கு  நடுநாயகமாக வெள்ளையுடையில் கைகளை அகலமா விரித்து இந்த உலகத்தையே ஆசிர்வதிப்பதுபோல் ஒரு ஏசுநாதர் சிலை .. அவர் தலைமேல் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட நியான் பல்ப் இரவு வெளிச்சத்திற்காக  அவரது காலடியில் ” நல்ல மேய்ப்பர் ” என்று பள்ளியின் பெயர் பெரிதாக பொறிக்கப்பட்டு   இருந்தது

அழகாகத்தான் இருக்கிறது …

இந்த காட்சிகளுடன் அவன் பத்தாம் வகுப்பிற்க்குள் பிரவேசித்தான் …

முதல் நாள் என்பதால் பள்ளிக்கு வேகமாக   வந்துவிட்டான் ..

யாரோ ஒருவன் ஜூன் 1, 1983 என்று கரும்பலகையின்  வலதுகோடியில் எழுதிக்கொண்டிருந்தான் ..

வகுப்பில் அவனைத்  தவிர இன்னும் இரண்டு மாணவர்களும் வந்திருந்தார்கள்

திருநா ஒரு இயற்கைப்பிரியன் எப்போதும் சுதந்திர காற்றைக்  குறையின்றி அனுபவிக்கவேண்டும் என்று எண்ணுபவன் ..அதனால் ஜன்னலோர இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் ….. ஜில் என்ற கடற்கரைக்   காற்று கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடல் ..இடைவிடாத அலைகளின் சப்தம் மெதுவாக அவன் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது  அவனுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாகவே இருந்தது

ஆமாம்…. தேவநகரம் ஓர்  அழகிய கடற்கரை கிராமம் .. மீனவ கிருத்துவர்கள் அதிகம் வசிக்கும் கிராமமென்றாலும்  மற்ற மதத்தவரும் இணக்கமாகவே வாழ்ந்துவந்தார்கள் …

யரோ பக்கத்தில் வந்து அமர்வதுபோல் ஓர்  உணர்வு தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்க்கிறான் ….

பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்திருந்தான்  சுந்தரம் …. ” நியூ அட்மிஷனா ?? ”  என்றான் …

“நீ??” என்றவனுக்கு … “முதல்ல மேல் பட்டனை ஒழுங்கா  போடு” என்று தோழமையைத்  துடக்கிவைத்தான் சுந்தரம்

சுந்தரம் ஒன்னாம் வகுப்பிலிருந்து இந்த பள்ளிகூடம்தான்  .

“லைப்ரரி இருக்கா ” என்று கேட்ட திருநாவை முறைப்பதுபோல் பார்த்தான் சுந்தரம்

“ஏன் ?? என்னவிஷயம் “

“இல்ல சும்மாதான் கேட்டேன்”

“இந்த ஸ்கூல்லே பெரிய ரூம் அதுதான் … நிறைய புத்தகம் இருக்குது ” என்று சொன்ன சுந்தரத்தை கட்டி முத்தம் இடவேணும் போல் இருந்தது திருநாவுக்கு ..

திருநாவுக்குக்  கதை படிக்கிறதுனா ரொம்ப புடிக்கும்

அம்மா அப்பா இரண்டுபேரும் வேலைக்குப்போற நடுத்தரக் குடும்பம்  ..

நீண்ட நாட்களுக்குப்  பின் பிறந்த தம்பி அவனைப்  பார்த்துக்கொள்வதற்கு ஒரு பாட்டி .. பாதுகாப்பு கருதி பள்ளிநாட்கள் தவிர மற்ற நாட்களில் வீட்டுக்   கதவுக்கு வெளிப்பூட்டு  … அந்தநேரத்தில் அவனுக்கு எல்லாமே இந்த கதை புத்தகங்கள் தான்  என்ற தன் வாழ்க்கை சரித்திரத்தைச்  சுந்தரத்துக்கு சொல்லிமுடித்தான்

நேரமாகவே மள மள  வென்று வகுப்பறை முழுவதும் மாணவர்கள் நிரம்பினார்கள் .

பத்தாம்வகுப்பு என்பதால் முதல் நாள் வகுப்புக்கு தலைமை ஆசிரியர் வருகைப் புரிந்தார் …நல்ல உயரம் அந்த உயரத்துக்கு ஏற்ற உடம்பு … முறுக்கு மீசை …  ரொம்ப முரட்டுத்தனமா தெரிந்தார் … ஆனால் அவர் பேச ஆரம்பித்ததும்  எல்லாமே மாறிப்போனது ….அவர் குரல் அத்தனை இனிமை …

” பசங்களா  பத்தாங்கிளாசுக்கு வந்தாச்சு … இனிமே உங்க விளையாட்டு தனத்தை எல்லாம் ஓரம் கட்டிவைத்துவிட்டுப்  படிப்பில முழூ  கவனம் செலுத்தணும்”” என்று மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பித்தார் …

” இந்த வயசுலதான் நீங்க வாழ்க்கையில் என்ன ஆக போகிறீர்கள் என்பதை  முடிவு செய்து அதைநோக்கி உங்கள் பயணம் நாளும் தொடரவேண்டும் ”   என்று சீரியசாக மாறிப்போனது ..

திருநா அவரை உன்னிப்பாகக்  கேட்டுக்கொண்டிருந்தான் …

” சரி இப்ப நீங்க ஒவ்வொருத்தரும் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு  நீங்க வாழ்க்கையில் என்னவா ஆக போறீங்க என்றதையும் சொல்லுங்க ”  என்றார் ..

டாக்டர் , என்ஜினீயர் , வக்கீல் , கலெக்டர் ,பேங்க் ஆஃபீஸ்ர் . என்ற வழக்கமான பதில்கள்

 திருநாவின்முறை வந்தது   தயங்கி எழுந்தான் …  அவன் தயக்கத்தைப்  பார்த்ததும்

” நியூ அட்மிஷனா ?? ”  என்றார் .

“ஆமாம்  என் பெயர்  S . திருநாவுக்கரசு ,  நான் எழுத்தாளன் ஆக போகிறேன்” என்றான் ..

சொல்லிவைத்தாற்போல் சுந்தரம் உட்பட அனைவரும் குபீர் என்று சிரித்துவிட்டனர்.  திருநாவிற்கு மிகவும் தர்ம சங்கடமாய்விட்டது

” சைலன்ஸ் ” என்று சத்தமாகவே கத்தினார் தலைமை ஆசிரியர் . அமைதியானது

” உன் பெயர் என்ன சொன்ன ??” மீண்டும் கேட்டார்

” S .  திருநாவுக்கரசு ” 

”  சரி சரி ” உட்காரு என்றார் .

மதிய சாப்பாடு வேளை .. சாப்பாட்டு டப்பாவை திறந்துகொண்டே ” ஏன்டா  இப்படி சொன்னே?” என்று கேட்டான்  சுந்தரம் ..

” எனக்கு தோணிச்சு  சொன்னேன் ” என்றான் திருநா ..

” அதுதான்  வந்ததும்வராததுமா  லைப்ரரி எங்க இருக்குனு கேட்டியா “”

“ஆமாம்  நீ டாக்டர் ஆகி என்ன பண்ணப்போறே ??” என்று சுந்தரத்தை பார்த்து கேட்டான் திருநா ..

“இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய போறேன் “என்றான்

” உன் சமுதாயத்தில் எத்தனை பேர் இருப்பாங்க ??” 

” ஒரு ஐம்பது , நூறு பேர் இருப்பாங்க” என்றான் சுந்தரம் ..

” எழுத்தாளனின் சமூகம் எவ்வளவு  பெருசு தெரியமா??” என்று வானத்தைப்  பார்த்துக்கொண்டே திருநா கேட்டபோது ..அவனின் வயதுக்கு மீறிய அறிவும் வாசிப்பு தந்த முதிர்ச்சியும்  சூரியன் போல் பிரகாசித்தது

 எதோ பொறி தட்டியதைப்  போல ” உம் ” என்றான் சுந்தரம்

இவன் படித்த கதை அவன் படித்த கதை என்று இவர்கள் பேச்சு எங்கெங்கோ போயிற்று ..

அதற்குள் மதிய வகுப்பு நேரம் ஆகி விட்டது . திருநா வகுப்புக்குள் நுழைத்ததுதான் தாமதம் , பின் வரிசையில் இருந்த ” வந்திட்டார்டா  எழுத்தாளர் ” என்றது ஒரு குரல்  .  அதைத்தொடர்ந்து மீண்டும் சிரிப்பு ..

சுந்தரம் மட்டும் திரும்பி பார்த்தான் ….

பள்ளி முடிந்து  வீடு திரும்பும் வேளையில்  , அமைதியாக வந்துகொண்டிருந்த திருநாவைப்  பார்த்து

” எதையும் மனசுல வச்சுக்காதே , நிம்மதியா போய் தூங்கு ” என்றான் ..

அடுத்தநாள் அதே மதிய சாப்பாட்டுவேலை ( வேளை ).  

” நீ ஏதாவது கதை எழுதிரிக்கிரியா ?? “என்று கேட்ட சுந்தரத்துக்கு “இல்லை” என்று தலையாட்டினான் திருநா 

” ஏன் “

” எங்க ஆரம்பிக்கறது , எப்படி முடிக்கிறது  , எதும் புரியல” என்றான்  வெள்ளேந்தியாக திருநா …

திடீர்  யோசனை வந்தவனாக ” ஏன் நம்ம தலைமை ஆசிரியரைக்  கேளேன் ” என்றான் சுந்தரம்

“அவரு கதையெல்லாம் எழுதுவரா ??”

” பார்க்கத்தான் முரடா இருப்பார் ஆனா ரொம்ப நல்லவரு ,  மழைக்கு ஒதிங்கியவர்கள் என்று பள்ளி படிப்பைப்  பாதிலே விட்டவர்களைப்  பற்றி ஒரு கதை எழுதி பரிசெல்லாம்  வாங்கியிருக்கிறார், நீ  வேணா சாயங்காலம் அவரைப்  போய்  பாரேன்”  என்றான் சுந்தரம் .

திருநாவிற்க்கு இருப்புக்  கொள்ளவில்லை .. பள்ளிமுடிந்ததும் சுந்தரத்திடம் கூட சொல்லிக்கொள்ளாமல்

தலைமைஆசிரியரின் அறைக்கு ஓடினான்

” M . ஆசிர்வாதம் M .A . M Ed ” தலைமைஆசிரியர் என்று போர்டு மாட்டப்பட்ட கதவு மூடியிருந்தது.

செய்வதறியாமல்  அங்கே நின்றுகொண்டிருந்தான் . ஆனால் யாரோ உள்ளே இருப்பதை அவன் உணர்ந்தான்

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கதவை திறந்து கொண்டு வெளிப்பட்டார் தலைமை ஆசிரியர் ..

திருநாவைப்  பார்த்து “என்ன வேணும்” என்று கேட்டார் ..

” கதை  எழுதணும் ” என்று தயங்கமால் சொன்னான் .  

ஆச்சரியமாகப்  பார்த்துக்கொண்டே   உன் பெயர் என்ன என்றவர்க்கு                

” S . திருநாவுக்கரசு ” என்றான்

“ஓ அந்த 10th  – சி பையனா ??””

” ஆமாம்  ஐய்யா “

” சரி பேசி கொண்டே போகலாம் வா  என்று சொல்லிக்கொண்டே  கதவைப்  பூட்டினார் .

தலைமை ஆசிரியர் தன் சைக்கிள்ளை உருட்டிக்கொண்டே கேட்டார் , “உனக்கு எந்த எழுத்தாரைப்  பிடிக்கும் ??”

” புதுமைப்பித்தன் ”  என்றவனை சற்று ஆழ்ந்து பார்த்தார்

“அவர் எழுதியதில்  உன்னை மிகவும்  பாதித்தக்   கதை எது ??”

” செல்லம்மாள் ”  பதில் கேட்டு ஒரு நிமிடம் அங்கே  நின்றார் …

” சைக்கில்ல ஏறு ” என்று சொன்னவாறே கடற்கரையை நோக்கி சைக்கிளை மிதித்தார் ..

” இதுக்கு முன்னால் ஏதாவது கதை எழுத முயற்சி பண்ணிருக்கியா  ??

” பண்ணியிருக்கேன்  ஐய்யா ஆனா எங்கே தொடங்கணும் எங்க முடிக்கணும் தான் தெரியல” என்று சுந்தரத்திடம் சொன்னதே திருப்பிச்  சொன்னான் ..

கடற்கரையும் வந்துவிட்டது .  ” இறங்கு ” என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை  ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு

செருப்பையும்  கழட்டி அங்கே விடச்  சொன்னார் ….

இருவரும் கடற்கரை நோக்கி நடந்தனர் ….அது மீன்பிடி துறைமுகம் என்பதால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது .

கடலைப்  பார்த்துக்கொண்டே திருநாவிடம் ”  இந்த கடல்தான் இலக்கிய உலகம் , இதில் கால் நனைப்பவன் வாசகன் , மூழ்கி முத்தெடுப்பவனே எழுத்தாளன் ” என்றார்

“என் கையை கட்டியாப்   புடிச்சிக்கோ” என்று சொன்னவாறே அலைக்கு அருகில் அழைத்துச்  சென்றார் ..

அலையும் நுரையும் அவர்கள் கால்களில்  வந்து வந்து மோதியது ..

“எப்படியிருக்கு  திருநாவுக்கரசு??” என்றுகேட்டார் …

“ஜில்லினு இருக்கு ” என்றான் ..

“இது ஒரு சாதாரண வாசகனின் உணர்வு  , நீ அதை தாண்டி அனுபவிக்கனும் … நீ சொல்ற அனுபவம் உன் வாசகனைப்  புரட்டிப் போடனும் … நிறைய படி … உன்னைச்  சுத்தி நடக்கிற ஒவ்வொரு சின்னசின்ன சம்பவத்தையும்    கவித்துவத்துடன் பாரு …இயற்க்கையுடன் தினமும் பேசு ரசி, நிறைய யோசி ,  உண்மையைத்  தேடு , சக மனிதன்மேல் அன்புவை ,அத்தனையும் உன்னுள் பூட்டிவை … ஒருநாள் அது எரிமலையாகவெடிக்கும் … அன்றைக்கு உனக்குள் ஒரு எழுத்தாளன் பிறப்பான்  நீ வேண்டாம் என்று சொன்னாலும் அவன் உன்னை விடமாட்டான் உன்னை எப்படியும் எழுதவைத்துவிடுவான் ”  என்றார் தலைமைஆசிரியர்

தன் மொத்த கேள்விக்கும் விடை கிடைத்த அதிர்ச்சியில் மௌனத்தில் ஆழ்ந்து போனான் திருநா

“வா போகலாம்” என்று கைப்பிடியை விடாமல் புடித்து கொண்டு சைக்கிளை நோக்கி கூட்டிச் சென்றார்

 திருநா புது மனிதன் ஆனான்    , இப்போது அவன் ஈரக் கால்களில் ஒட்டிக்  கொள்ளும் ஒவ்வொரு கடல் மணல் துகள்களும் எங்களை இந்த கடல் பரப்பிலிருந்து கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்வது போல்   தெரிந்தது அவனுக்கு .

” காலை  நன்றாக உதறி விட்டு  செருப்பைப்  போடு ” என்ற  தலைமை ஆசிரியரிடம்  ”  இல்லய்யா  பரவாயில்லை ” என்று சொல்லிக்கொண்டே தன் செருப்புக்குள் கால்களை நுழைத்தான்

 ஐய்யா சிரித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டி சென்றார் ..

இரவெல்லாம் தூக்கம் வரவில்லை அவனுக்கு … எழுந்து உட்காரத்தான் .ஏதோ யோசித்தான் . எங்கிருந்தோ அவன்  மனதுக்குள் வந்தது முதல் கதையின் தலைப்பு  ” மெய் என்று தோன்றும் பொய் ”  சந்தோஷத்தில் இரவு முழுவதும் தூங்காமல் போனான் .

மறுநாள் பள்ளிக்கு வந்தான் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் .. சுந்தரத்தைப்  பார்த்தவுடன் கட்டி அணைத்துக்கொண்டான் … நேற்று ஐயாவுடன் கடற்கரையில்  கால் நனைத்தையும் கதை கேட்டதையும் கொட்டித்  தீர்த்தான் …

இரு இரு ஐய்யா கிட்ட என் முதல் கதையின் தலைப்பைச்  சொல்லிட்டு வரேன் என்று ஓடினான்

இதையெல்லாம் கால்நனைக்காமலே  கால்நனைத்தவர்களிடம் கதைகேட்டவனாக…வேடிக்கைபார்த்துகொண்டிடிருந்தான்  .. சுந்தரம்

                                                           **************

4 Comments on “கால்நனைத்தவனிடம் கதைகேட்டவன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )”

Comments are closed.