ஔிக்குள் கலந்த பேரொளி /அனங்கன்.

தேவமைந்தன் எதிரே
வந்தபோது திகைத்துப்போய்விட்டேன்.

தலையில் முள்முடி…கையில் ஆணிபதிந்த இரத்தக்கசிவு…
இன்னுமா ஆறவில்லை என்றேன்…கலிவிரக்கத்தோடு.

மனிதனின் பேராசைகள்
என்னைத் திரும்பத்..திரும்ப அறைகின்றன எனறார்
மெல்லியகுரலில்.

உன்வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால்நீ சென்றால்…
அவர்கள் மாறிவிடமாட்டார்களா…

இல்லை என்னால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தி
என்னை நிருபித்துக்கொள்ளமுடியாது….

வருவேன் என்ற நம்பிக்கையே மனிதனைக்
கொஞ்சம் மனிதனாய் வைத்திருக்கிறது…
மூடியகைக்குள் ஒன்றுமில்லையானால்
அவர்கள் ஏமாற்றமடையக்கூடு்ம்..

அப்படியானால் அவர்கள்
நம்பிக்கொண்டிருக்கும்
உனது”பரலோக ராஜ்யம்..”

அப்படியென்று எதுவுமில்லை…எங்கு சுயநலமின்றி

அன்பு பிறக்கிறதோ…அங்கு நானிருக்கிறேன்

உன்வருகை இல்லையானால் அவர்கள்
ஏமாற்றமடையமாட்டார்களா…

இல்லை…நம்பிக்கைதான்
வாழ்வை நகர்த்திச்செல்கிறது…அதுஅப்படியே இருக்கட்டும்.

அடுத்த கேள்வி கேட்பதற்குள்..தேவமைந்தன் திரும்பிப்பாரக்காமல்
ஔியோடு கலந்துவிட்டார்.