மாஸ்க்/சாந்தமூர்த்தி

                              

பேருந்தில் நாலைந்து பயணிகளைத் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. வெளியிலும் அப்படித்தான்.சிலர் தாடைக்குக் கீழும்,மூக்குக்குக் கீழும் கடமைக்கு வைத்திருந்தனர்.நகரில் அங்கங்கு கொத்துக் கொத்தாய் குட்டி யானைகளும்,லாரிகளும் இடத்தை அடைத்துக் கொண்டு நின்றன. கிராமத்தில் பைக்குகள். மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கை பெருகுகிறது.சாலையோர மரங்களும்,புதர்களும் புழுதி முகமூடியோடு உறுத்தின.மழை பெய்து குளிப்பாட்டினால்தான் சுத்தமாகும்.
நம் கண்ணுக்கு மிக அருகில் ஒரு பொருளை வைத்துப் பார்த்தால் அதை நமக்கு முழுமையாகத் தெரியாது.இடம்,காலம், இரண்டிலும் சிறிது விலக்கம் இன்னும் அதிக தெளிவைத் தரும். கிராமத்துக்குப் போகும் போதெல்லாம் எனக்கு இப்படித் தோன்றுகிறது.
ஒரு வருட கொரோனா இடைவெளிக்குப் பின் ஊருக்குப் போனேன்.ஒரு பங்காளி வீட்டில் துக்கம். கொரோனா காலத்தில் மரணிப்பது கூடுதல் துரதிருஷ்டம்.
ஒன்றாகப் பிணைந்து வாழ்ந்த போது முறுக்கிக் கொண்டிருந்தவர்களும், கண்டு கொள்ளாதவர்களும் இப்போதெல்லாம் நெருங்கிப் பேசுகிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள்.அன்பு காட்டுகிறார்கள்.இனி இந்த ஆளால் நமக்கு தொல்லை எதுவும் இருக்காது என்ற தைரியமாக இருக்கும்.எந்த விசேஷமும் சுமுகமான சமூக உறவுக்கான வாய்ப்புதான்.
வழக்கம் போல ஆண்களுக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள். பெண்கள் அமர தரையில் பெரிய சைஸ் படுதாக்கள். கிராமத்தில் சம உரிமைக்கு இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும். பெரும்பாலான வீடுகளில் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த பிரமாண்ட படுதாக்கள் இரண்டாவது இருக்கும்.
சென்று அமர்ந்ததும் ஒருவர் வெற்றிலை- சீவல் தட்டை வரவேற்பது போல் நீட்டுவார்.வெற்றிலை சீவல் எடுத்து போட்டுக் கொள்ளலாம்.அந்த பழக்கம் இல்லாதவர்கள் அல்லது கோழி முட்டும் என்று பயந்தவர்கள் சாஸ்திரத்துக்கு ஒரு சீவலை எடுத்து மெல்லுவார்கள்.அதுவும் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசீர்வதிப்பது போல் தட்டை தொடுவார்கள்.‘நோ,தேங்க்ஸ்’ என்று அர்த்தம்.தட்டை நீட்டிய இளைஞரிடம், ”தம்பி, நீங்க?….”என்றேன்.அவர் யாரென்று சொல்லி,”ஒவ்வொரு தடவையும் கேக்குறீங்க.சொல்றேன். மறந்தர்றீங்க,பெரியப்பா”என்றார்.சிறிது அசடு வழிந்தேன்.
இறந்தவர் இறந்தது பற்றி சிறிது விசாரித்த பின்,அவரைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொன்ன பின் அது பிறகு துக்க வீடாக இருப்பதில்லை. விவசாயம், அரசியல்,சமீப தகறாறுகள்,சமகால பிரச்னைகள் என்று தொடங்கி,கிண்டல், கேலி,நையாண்டி என்று கொண்டாட்டமாக மாறும்.மாமன் — மச்சான் கேலிகள் கிராமத்தில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
வருகையாளர்களுக்கு அவ்வப்போது டீ,காப்பி,பயத்தம் பருப்பு பாயாசம், பவண்டோ என்று பிளாஸ்டிக் கப்புகளில் வந்து கொண்டே இருக்கும்.சிலர் எதையும் மறுப்பதில்லை.டீ வந்த போது சற்று தயங்கியவாறே ஒரு கப்பை எடுத்துக் கொண்டேன்.பல சமயங்களில் டீக்கும்,பாயாசத்துக்கும் அதிக வேறுபாடுகள் இருக்காது.சூடான பானகமாக இருக்கும்.அதிசயமாய் அன்று டீ அதிக சீனி பெய்யப் படாமல் நன்றாகவே இருந்தது.காலி கப்பை காலருகே வைக்க வேண்டும்.
அப்போது ஒரு பாட்டி என்னை நோக்கி வந்தார். ”நல்லாருக்கீங்களா?பாத்து ரொம்ப காலமாச்சு” என்று பிரியத்தோடு விசாரித்தார்.நான் அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஏற்பட்ட சந்தேகத்தோடு அவர் “என்னை யாருன்னு ஒங்களுக்கு அடயாளந் தெரியுதா?”என்று என்னைக் கேட்டார்.அடுத்த விநாடி நான் சொன்னேன்: ”மகாலட்சுமி!”
மகாலட்சுமியை நான் பார்த்து,பேசி எப்படியும் ஐம்பது வருஷமாவது இருக்கும்.நான் சரியாகப் பெயரைச் சொன்னதும் அவர் சந்தோஷத்தில் பொங்கி அழத் தொடங்கி விட்டார்.பெண்கள் அழுவதற்கு வேதனை தேவையில்லை.”நல்லா இருங்க.ஒடம்பப் பாத்துக்கங்க என்று சொல்லி விட்டு உடனே கிளம்பினார்.
மகாலட்சுமி என் மாமா மகள்.இல்லை,அவர் என் இள வயதுக் கதா நாயகி இல்லை. என்னை விட இரண்டு வயது மூத்தவர். அவருடைய பெயர் மட்டுமல்ல; எனக்கு அந்த மாமாவின் மூன்று பெண்களின் பெயர்களும் நினைவிருக்கிறது.பெரியக்கா பெயர் கமலா.சின்னது துளசி.இது நடக்கா.அக்கா என்று சொல்கிறேனே என்று நினைக்க வேண்டாம்.என்னை விட மூத்த மாமன் மகள்களையும்,அத்தை மகள்களையும் அக்கா என்று அழைப்பது என் வழக்கம்.ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உடல் மாற்றங்களை மீறி அடையாளம் கண்டு கொண்டதும்,பெயரை சரியாகச் சொன்னதும் அவரைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியையும்,நிறைவையும் தந்தது.
அப்போது ஒரு இள வயதுப் பெண் மாஸ்க் அணிந்து அருகில் வந்தார்.”நல்லா இருக்கீங்களா,மாமா?”என்றார்.”நல்லாருக்கேன்.நீங்க யாருன்னு தெரியலியே” என்று தயங்கினேன்.”நான் சின்னப் பொண்ணு”என்று சொல்லியவாறுஅவர் மாஸ்க்கைக் கழற்றினார்.”அட,சகுந்தலாவா!”என்றேன்.”கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்களே!”என்று சொல்லிக் கொண்டே கை குலுக்க கையை நீட்டினார்.
ஒரு இளம் பெண் ஒரு ஆணுடன் கை குலுக்க முற்படுவது கிராமத்தில் இப்போதும் அதிசயம்தான்.கையிலும் கற்பு இருப்பதாக நினைப்பு.கொரோனா காலத்தில் கை குலுக்குவது சுகாதாரமான செயல் அல்ல;கைகளை குவித்து வணங்குவதே நன்று என்ற விஷயத்தை மறந்து போய் நானும் கை நீட்ட,கை குலுக்கினோம்.பெண்களின் கை சற்று ஈரமாக,துவண்டு போய் இருக்கும். சகுந்தலாவின் கை உறுதியாக,கம்பீரமாக இருந்தது.
“நான் சின்னப் பொண்ணுன்னு இப்ப சொன்னது மாதிரி,கிழவியான பிறகு சொல்லிடாதே.எல்லாரும் சிரிப்பாங்க”என்றேன்.எல்லோரும் சிரித்தார்கள். அந்த செல்லப் பெயர் என் நினைவில் இல்லை.செலக்டிவ் அம்னீசியா.
சகுந்தலா என் முன்னாள் மாணவியுங் கூட.+2 என்னிடம் படித்தார்.நான் அவருக்கு சார்+மாமா.நாளைக்கு அவர் மகளுக்கு+2 தேர்வு தொடங்குகிறது என்றார்.ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறார்.அது பேச்சு,சிரிப்பு போன்ற உடல் மொழியில் தெரிந்தது.காலி சேர் நோக்கி கைகாட்டினேன். அமர்ந்தவாறே “முந்தி பாத்ததுக்கும்,இப்ப நீங்க இருக்குறதுக்கும் சம்பந்தமே இல்லை. இன்னோரு கோணத்துல நீங்க அப்புடியேதான் இருக்கீங்க”என்றார்.
இந்த மாமா மகள்கள்,அத்தை மகள்கள் யாரும் முன்பு என்னிடம் இப்படிப் பேசியவர்கள் இல்லை.அந்தக் காலத்தில் பெண்களோடு பேசுவதோ,சிரிப்பதோ மிகவும் அபூர்வம்.பெண்கள் வயதுக்கு வந்த பின் முதல் வேலையாக கடுகடுவென்ற,சீரியசான,சற்று கோபமும்,எரிச்சலும் கலந்த “மாஸ்க்” ஒன்றை அணிந்து கொள்வார்கள்.பிறகு கிட்டத் தட்ட அதைக் கழற்றுவதே இல்லை. வாழ்க்கையில் தேவையற்ற தொற்றுகள் ஏற்படாதிருக்க அந்த மாஸ்க் அவசியம் போலும்.
இனி இந்த மாஸ்க் இல்லையென்றாலும் தமக்கோ, பிறருக்கோ எந்த தொற்றும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியானதும் பெண்கள் அதை அகற்றி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.வயோதிகம் தடுப்பூசி போல அந்த பரிமாணத்தை நிகழ்த்துகிறது.அப்போது பெண் தாயாகிறாள்.தன் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும்.அனைத்துயிருக்கும்.அர்த்தமற்ற கூச்சம் விலகி தாயாகக் கனிகிறாள்.கண்ணியமான,பொறுப்புள்ள,கம்பீரமான ஆளுமையாகிற போதும்,அந்த கனிவும்,முதிர்ச்சியும் வயோதிகத்துக்கு முன்பே வந்து விடுகிறது.
அப்படியெனில் அவளும் எந்த கல்மிஷமும்,கூச்சமும் துறந்து என்றாவது ஒர் நாள் என்னிடம் வந்து நலம் விசாரிக்கக் கூடும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஆண்களின் பேச்சு,சமீபத்தில் எழுந்துள்ள இரண்டாம் அலை கொரோனாவைப் பற்றி மாறியது.என் காதில் விழுந்த சில துண்டுச் செய்திகள்: தடுப்பூசிப் போட்டுக் கொண்டாலும் மாஸ்க் அணிய வேண்டும்.தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு முதல்வருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் ஒரு தலைவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.