இனிக்கும் தமிழ் – 71

இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது.
உன் வாழ்வை சீராக்கு என்று.
உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகி
விட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. நெய்யை
விட்டா நெருப்பை அணைக்க முடியும்.
பொருள்கள், அனுபவங்கள் மேல் உள்ள பற்றை விட்டு இறை நாட்டம், ஆத்ம
முன்னேற்றத்துக்கு முயல வேண்டும்.
நமக்கு இறை நாட்டம் வந்து விட்டால் போதுமா? இறைவனை அடைய முடியுமா? அப்படி
என்றால் எல்லோரும் அடைந்து விடுவார்களே.
மணிவாசகர் சொல்கிறார்….”. நம்மை போல மோசமானவர்கள் யாரும் இந்த உலகில்
கிடையாது. நம்மை ஆட்கொள்ள அந்த இறைவனே இறங்கி இரங்கி வருகிறான். ஊரில்
உள்ளவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிரிக்கிறார்கள். ‘உனக்கு என்ன
பைத்தியமா..? அவனை போய் ஆட்கொள்ள செல்கிறாயே…நீ எவ்வளவு பெரிய
ஆள்…அவன் ஒண்ணுக்கும் உதவாதவன் .. அவனுக்கு அருள் செய்யப் போகிறாயே’
என்று இறைவனை பார்த்து எல்லோரும் நகைக்கிறார்கள். இருந்தும் அவன் நமக்கு
அருள் செய்ய வருகிறான்” என்று உருகுகிறார் மணிவாசகர்.
நமக்கு அருள் செய்ய வேண்டும் என்று ஒரு நிர்பந்தமும் இல்லை இறைவனுக்கு.
அருள் செய்யா விட்டாலும் யாரும் ஏன் என்று அவனை கேட்கப் போவதும் இல்லை.
இருந்தும் அவன் கருணை, நமக்கு அருள் செய்கிறான். மற்றவற்றை விட்டு விட்டு
அவன் தாளைப் பற்றுங்கள் என்கிறார் மணிவாசகர்.
பாடல்
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்;
நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட,
தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.
-
