கம்பனைக்காண்போம்-20/வளவ. துரையன்

நாட்டுப் படலம்

                      முத்தும் பொன்னும் பவழமும் 


  கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான். 
            வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன் மேதிக்குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலிப் பரப்பு எலாம் அன்னம் பாங்காக்
கரும்பு எலாம் செந்தேன் சந்தக் காஎலாம் வண்டு ஈட்டம்      [35]

[வரம்பு=வரப்பு; தத்தும்=பாயும்; பணிலம்=சங்கு; குரம்பு=வாய்க்கால் கரை; மேதி=எருமை; கழுநீர்க் கொள்ளை=செங்கழுநீர் மலர்க் குவியல்; சாலி=ஒருவகை நெல்; பாங்கர்=பக்கம்; சந்தம்=அழகிய]

                  அழகிய ஓசை நயத்தோடு உள்ள பாடல் இது. கோசல நாடு எப்படி வளமாக இருந்தது என்பதைக் கம்பன் இந்த ஒரு பாடலிலேயே விளக்கி விடுகிறான். அந்த நாட்டின் வயல் வரப்புகளில் எல்லாம் முத்துகள் உள்ளன. நீர் தாவி ஓடுகின்ற மதகுகளில் எல்லாம் சங்குகள் உள்ளன. நீர் நிறைந்த  வாய்க்கால் கரைகளில் எல்லாம் செம்பொன் கட்டிகள் உள்ளன. எருமைகள் படுத்திருந்ததால் ஏற்பட்ட பள்ளங்களில் எல்லாம் செங்கழுநீர் மலர்க் குவியல்கள் உள்ளன. வயலில் பரம்படித்த இடங்களில் எல்லாம் பவழங்கள் உள்ளன. சாலி எனும் ஒருவகை நெல் விளைந்த இடங்களில் எல்லாம் அன்னப் பறவைகள் மேய்கின்றன. பக்கங்களில் உள்ள கரும்புகளில் எல்லாம் சிறந்த தேனைக் குடித்து மகிழ்ந்த வண்டுக் கூட்டங்கள் உள்ளன. இவ்வாறு கோசல நாடு வளமாக இருந்ததாம்.