மறந்ததே என்ன நெஞ்சமோ/வாசுதேவன் ஸ்ரீனிவாஸ்

இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம்    ஒதுங்கி ஒரு   குக்-கிராமத்தில் நடக்கும்  கல்யாணத்துக்கு போவது தேவையா என்று நினைத்து   முதலில் ராஜூ  மறுத்தாலும்  இறுதியில் எப்படியோ அவன்  சம்மதத்தை பெற்று அவனையே  வீட்டிற்கு   காவல் வைத்து விட்டு,    பெரியவரிலிருந்து பொடிசு  வரை  கிளம்பி போய்விட்டார்கள். 

அவர்கள் திரும்புகிற வரை இரண்டு நாட்களுக்கு   சுய-சமையல்தான் .

வீடு அமைதிக்  கோலம் பூண்டிருந்தது .நவம்பர் மாதம் என்பதால் சீக்கிரமே இருட்டி விட்டது..

பிரிஜ்ஜிலிருந்த  கடைசி இரண்டு கரண்டி மாவில்  தோசை போட்டு  சாப்பிட்டான். 

டி வி யில்  சுவாரஸ்யமாய் எதுவும் இல்லை.

‘நைட் லாம்ப்’ தவிர  அனைத்து  விளக்குகளையும்நிறுத்தி  கதவைத்  தாளிட்டுப்    படுக்கையில் சாய்ந்தவன்  உடனேயே    கண்ணயர்ந்தான் 

2

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து 

“பிளீஸ் ..ஓப்பன் தி டோர்”

பதிவு-செய்த இனிய-குரலில்  அழைப்பு-மணி அழைத்தது.

இந் நேரத்தில் யார் …… ? யோசித்தபடி     கதவைத் திறந்தால்   இன்ப அதிர்ச்சி! …தலையில் பெரிய கட்டுடன் விமலா  நின்று கொண்டிருந்தாள்.

3

சிம்மக்கல், மதுரை முதல் முதலாய் ராஜு விமலாவைச்  சந்தித்த இடமும் ஊரும்….

அப்போது   ராஜு,     நிதி  நிறுவனம் ஒன்றின்  மதுரைக்  கிளையில் தவணைப்-பண வசூல் செய்யும் பணியில் இருந்தான்   … 

12/4 என்கிற கதவு  எண்ணை  உறுதி செய்து கதவைத் தட்ட..  திறந்தாள்  சற்று அழகான பெண் ஒருத்தி.

“குட் மாணிங் …இங்க  விமலாங்கிறது ?” 

” நாந்தான்  ..என்ன விஷயம் சார்  ?”

அவள்தான் விமலா என்று உறுதியானவுடன் குரலைச் சற்று உயர்த்தி …

“ஐயம் ராஜூ … ஈசி பைனான்ஸ்….”

என்றான் சற்று கடினமான குரலுடன்…

இருந்துட்டுப் போ . என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தாள் அப் பெண்.

“ஏம்மா…. வண்டிக்கு  நாலு  மாச ‘டியூ’ அப்படியே நிக்குது …கால்  பண்ணினா பதில்  இல்ல …என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ..?

என்று கேட்டான்.

“சார் ஒரு நிமிஷம் உள்ளே வாங்க … “

“ஆபிஸ் ரூல்ஸ்படி நான் வீட்டுக்குள்ள வரக்கூடாதும்மா…”

“பரவாயில்லை ..ப்ளிஸ் … …எதுவானாலும் உள்ள வந்து பேசுங்க..”

“இத பாரும்மா …நான்  ஒக்காந்து   பேச வரல்ல..  . நாலு மாச டியூ கட்ட வேண்டி இருக்கு…. கொறைஞ்சது ரெண்டு மாச டியூவையாவது  இப்போ கட்டு  .. இல்ல .. வாசல்ல இருக்கிற உன்  வண்டிய நான் எடுத்துட்டு போய் கிட்டே இருக்கேன்!  என்ன சொல்ற?

” சார் ஒரு நிமிஷம்….என்னை  பேச விடுங்க”

“ம்ம் …சொல்லு  …?” 

“நீங்க தேடி வந்த  பொண்ணு   நான் இல்ல …”

“வாட்  ? …இப்போத் தானே கொஞ்சம் முன்னே நாந்தான் விமலான்னு சொன்னே  ?

“..என் பேரு விமலா.  …ஆனாநான்  நீங்க சொல்ற  விமலா இல்ல அது என்னோட கசின்…அவ  பேரும் விமலாதான்.”

” சரி ..வீட்டுல பெரியவங்க யாராச்சும் இருந்தா வரச் சொல்லும்மா”

“.அவங்கல்லாம் கிராமத்தில  இருக்காங்க”

“சரி ..உன் கசின்  விமலாவை   கூப்பிடு..”

“சாரி சார்..அவ வர மாட்டா ..”

“ஏன்….?”

 ” இறந்துட்டா ..”

“எப்படி ?”

“கொரானா வந்து”

“சரி …அப்போ  …வண்டிய எடுத்துட்டு போகறதத்  தவிற வேறு வழி தெரியல   “

என்று பாக்கெட்டிலிருந்து டியூப்ளிகேட் சாவியை வெளியே எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானான் ராஜு.

” சார் ஒரு நிமிஷம். .!  ஆ… ஊ..ன்னா வண்டிய எடுத்துட றேன்னு  சொல்லி மிரட்டுறீங்களே தவணைப் பணம்  வசூல் பண்றதுக்கு  மாத்து  வழியை  யோசிக்க மாட்டிங்களா?”

“மாத்து வழியா? …என்ன சொல்ற நீ ?”

“…அது விஷயமாத்தான்  உங்கள உள்ளே வர சொல்றேன் …ப்ளிஸ் “

என்று அவனை ‘கஜோல்’ பண்ணி  உள்ளே அழைத்து சென்றாள்..

“நான் சொல்றத பொறுமையா  கேளுங்க…எனக்கு மட்டும் சரியா ஒரு மாசம்   டயம் குடுங்க. …அடுத்த மாசம்   வண்டிக்கான நாலு  மாச  டியூவையும்  கட்டிட்டு அரியர்ச கிளியர்  பண்றேன்  “

இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணா? மத்தவங்க கடன் சுமையை  தான் ஏத்துக்கறேன்னு சொல்றாளே! 

என்று ஆச்சர்யப் பட்டான் ராஜு 

“உன்னால முடியுமா? நீ எங்க ஒர்க் பண்றே  கவர்ன்மெண்டா ..பிரைவேட்டா  ?”

“இனிமேதான் தெரியும் சார்!”

என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் .

” புரியலை  “

“சார்….. நான் பி காம் வரைக்கும் படிச்சிருக்கேன்”

“அதுக்கு ?”

“நீங்க உடனடியா  எனக்கு ஒரு   வேலை வாங்கிக் கொடுத்தா …அடுத்த மாசத்திலிருந்து   தவணைத் தொகையை தவறாம  கட்டிடுவேன் “

“ஓ …! நான்  வேலை வாங்கிக் குடுத்தா வர்ற  சம்பளத்தில இருந்து  டியூவை நீ கட்டிடுவே…”

” ஐ.. ய்.. யோ… அவ்வளவே தான் சார்!  சொன்னதை கற்பூரம் மாதிரி புடிச்சிகிட்டிங்க  “

ராஜுவும் பதிலுக்கு 

“உடனடி வேலை! ….ம்ம்ம்…. மதுரை-சப் கலெக்டர் போஸ்ட்  காலின்னு கேள்வி பட்டேன் ..வேணும்னா  அந்த வேலைல சேந்துக்கிறியா?”

“எனக்கு ஓகே!   ..ஆனா வேலை என் படிப்புக்கு  கொஞ்சம் ஓவரா இல்ல ?”

“நிறுத்தும்மா! …

என்ன பாத்தா  எப்படித் தெரியுது ..?  ஊம் ஹும் …இது வேலைக்காகாது …நான் வண்டியை எடுத்துட்டுப் போறேன்…”

என்றவனின்  காலில் சட்டென்று விழுந்து  கெஞ்சினாள் விமலா.  

பரிதாபமாய் இருந்தது ராஜுவுக்கு.

“அட எழுந்திரும்மா. யாராவது  பாக்க போறாங்க … நீ இவ்வளவு கெஞ்சறதால உனக்கு  ஒரு மாசம் டயம் தரேன் … ஒரு வேலை தேடிகிட்டு மாசா மாசம்  டியூவைக் கட்டப்  பாரு! ..இல்லன்னா வண்டிய எடுத்துடுவேன் …ஓகே ?

உன் செல் நம்பரைச் சொல்லு  என்று கேட்டு வாங்கியவன் அங்கிருந்து புறப்பட்டான்.  

தன் முடிவை உறுதியாய் சொல்லிவிட்டுக்   கிளம்பிய  அவனையே உற்றுப்  பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா.

வழி முழுவதும்  அவள் நினைப்பாகவே இருந்தது ராஜுவுக்கு ..சின்னப் பெண்ணாக இருந்தாலும் எவ்வளவு  தைரியமா நடந்து கிட்டா  ?எப்படி சாதுர்யமா பேசறா ?  இப்படிப்பட்ட   பெண்ணைத்தான் நாம கல்யாணம்  பண்ணிக்கணும் என்று முடிவு செய்தான்.

4

கொடுத்த வாக்கைக் காப்பாற்றினாள் விமலா.

அதிர்ஷ்டம் கை கொடுக்க….. ஒரு  வேலையில் சேர்ந்தவள்  அடுத்த மாதமே  இரண்டுமாத  தவணைத் தொகையை  அலுவலத்தில்  கட்டிவிட்டு ராஜூவையும்  சந்தித்து விஷயத்தை சொன்னாள்.

ராஜுவுக்கு அவளுடைய வாக்கு தவறாமை  பிடித்திருந்தது  ..அவள் மேல் நம்பிக்கை பிறந்தது.  இருவருக்கு இடையே இருந்த  

நட்பு காதலாய் மலர்ந்து .. அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர் ..எதிர் காலம் பற்றி விவாதித்து …இருவர் வீட்டார் சம்மதத்துடன் திருமண  நிச்சயதார்த்தமும்  முடிந்தது.

சந்தோஷமான தருணம்….

நாள் விடாது வீடியோ கால்தான் …காதல் பரிமாற்றங்கள் தான் .. ஆனால்  அந்த சந்தோஷம் ஒரு  வாரத்திற்கு மேல் நிலைக்க வில்லை  … 

ஒரு சனிக்கிழமை மாலை  …

திருமணப்  பத்திரிகையின் ‘ப்ரூபை’ எடுத்துக்கொண்டு விமலாவைச் சந்திக்க உத்ஸாகமாய்  புறப்பட்டான் ராஜு… வீட்டை அடைந்து கதவைத் தட்டினான்.

கதவு திறக்க….. விமலா மெல்ல  எதிர்ப்பட்டாள்.

“ஹை  “

“யார் நீங்க .. யாரைப் பாக்கணும்?”

“விளையாட நேரமில்லைம்மா   …உள்ளே போய் பேசலாமா ?”

“மிஸ்டர் …! யாருன்னு கேட்டுக்கிட்டிருக்கேன் அதுக்கு ..பதில் சொல்லாம .ஏதோ பல நாள்  பழகினாப் போல உள்ளே போகலாமாங்கறிங்களே  ?”

ராஜுவுக்கு கோபமாய் வந்தது. 

“என்ன விளையாட்டு இது  விமலா …எனக்கு நெறைய வேலை கிடக்கு ..”

“விமலாவா? அவ யாரு  விமலா ? மிஸ்டர் …  அட்ரஸ் மாறி வந்துட்டிங்கன்னு நெனைக்கிறேன்”

இவ என்ன இப்படி நடந்துக்கிறா இன்னைக்கு ..இவளுக்கு என்ன ஆச்சு என்று அதிர்ச்சியில் உறைந்து செய்வது அறியாது நின்றான்  ராஜு. வீட்டு மற்றவங்களைக் கேட்கலாம் என்றால் அவளைத் தவிர யாருமே இல்லை.

“பத்திரிகை ப்ரூப் வந்திருக்கு! ..நான் பாத்த வரைக்கும் சரியா இருக்கு நீயும் பாத்துட்டு ஓகே சொல்லிட்டா…. “

என்றவனை இடை மறித்து 

“பத்திரிகையா ? என்ன பத்திரிகை?யாருக்குக் கல்யாணம்?” 

என்றவுடன் பொறுமையை முழுதும் இழந்த ராஜு  இனி இவளுடன் பேசிப் பயனில்லை என்று உணர்ந்து 

“சாரி ..நான் அட்ரஸ் மாறிதான்  வந்துட்டேன் “

என்று சொல்லி அந்த இடத்தை விட்டு உடனடியாக நகர்ந்தான்.

கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும்  கருணை இன்றி உடனடியாக  நிறுத்தப் பட்டன.. 

அந்த சோக நிகழ்ச்சிக்குப் பிறகு விமலாவை இன்றுதான் சந்திக்கிறான். 

5

 ஒருபுறம் சட்டென்று அவளை மீண்டும் சந்தித்தது  இன்ப அதிர்ச்சி என்றாலும்  மறுபுறம் அன்று அடையாளம் தெரியாதது போல் நடந்து கொண்டதின்  வெறுப்பு  இன்னும் ஆறவில்லை ராஜுவுக்கு.

“யார் நீங்க …என்ன வேணும்?”

“ஐ … !அன்னைக்கு நான் உங்கள  கேட்டேங்கறத மனசில வச்சுக்கிட்டு    அதே மாதிரி என்னை வீட்டுக்கு வெளியேவே  நிக்க வச்சு கேக்கிறிங்களா ?”

“அப்படி பழி வாங்கணும்ங்கிற எண்ணம் எனக்கில்லை …அந்த அளவுக்கு நீ ‘ஒர்த்’ தும்  இல்லை… “

“உங்களை பாக்கலாம்னு ஆசையா வந்தா ஏன் இப்படி மனசை நோக அடிக்கிறா  மாதிரி பேசறீங்க?”

“உனக்கு  மனசுன்னு  ஒண்ணு இருக்கா?   இருந்தா அந்த மனசக் கேளு … அது சொல்லும் நீ எனக்கு பண்ணின  துரோகத்தை “

முகத்தில் கடுகடுப்புடன் பேசினான் ராஜு.

“முதல்ல நான் உள்ளே வரேனே…ப்ளீஸ் …யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க  “

என்று  அவனைத் சிறிது தள்ளிக் கொண்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள் விமலா.

கொதித்தெழுந்த ராஜு மேலும் தொடர்ந்தான்  ..வார்த்தைகள்  மறுபடியும் அவள் மேல் அம்பு போல் பாய்ந்தன .

“என்ன  ஜென்மம் நீ? தெரியாமத்தான் கேக்கிறேன் 

அது எப்படிம்மா உன்னாலே  சட்டையை கழட்டிப் போடறாமாதிரி உணர்வுகளை கழட்டி  போட முடியுது? சீ.. …முதல்ல எழுந்து வெளியே போ…என் முன்னாலே நிக்கற தகுதி கூட உனக்கு இல்ல ..”

“ராஜு ஒரு நிமிஷம் என்ன நடந்ததுன்னு சொல்றேன்  காது குடுத்து கேளுங்க.”

” போதும் ..நீ சொல்றத நம்பிஇதுவரை நான் ஏமாந்தது போதும்  நான் இப்போ  தெளிவாயிட்டேன் ….வெளியே போ..”

“உறுதியா தான் சொல்றிங்களா?

“ஆமாம் ..”

” சரி ..கடைசியா கேக்கறேன் நடந்த விஷயத்த  யார் எடுத்து ன்னா  நீங்க   சமாதானம் ஆவிங்க ?”

“யார் சொன்னாலும் ஆக  மாட்டேன்!”

“இல்ல ராஜு  ..ஒருத்தங்க  சொன்னா கேட்டுக்கிடத்தான்  வேணும் …”

மாமா!  அத்தை! இப்போ நீங்க உள்ளே வரலாம்  “

என்று சொன்ன உடனேயே கதவுக்குப் பின்னாலிருந்து    கல்யாணத்திற்கு சென்றிருந்த மற்றவங்க பின் தொடர ராஜுவின் அப்பாவும் அம்மாவும் உள்ளே நுழைய முற்பட்டனர் .

“நீங்க எப்பப்பா வந்திங்க …என்ன ஆச்சு? …கல்யாணத்துக்கு போகலையா? ஏன் திரும்பி வந்திட்டிங்க ?”

அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கேட்டான் ராஜு 

அது….ஒரு பெரிய கதை …சொல்றேன் …பொறுமையா கேளு 

இங்கிருந்து கார்ல கெளம்பினமா? …ஒரு பத்து கிலோமீட்டர்தான்  போயிருப்போம்  திடீர்னு ஒரு திருப்பத்தில் வண்டி பிரேக் பிடிக்கல.

டிரைவரும் வண்டியை கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவோ முயற்சி பண்ணினார் …ஆனால் எதிர் ப்ளாட்பாமில் நடந்து  வந்துக்கிட்டிருந்த  விமலா மீதும் சம்பந்தி மீதும்  மோதி நிறுத்த   அவங்களுக்கு தலையில் அடிபட்டு காயம்..   அவங்க   ரெண்டு பேரையும்  நம்ம கார்லயே கிளினிக்குக் கூட்டிட்டு போய் காயத்துக்கு டிரெஸ் பண்ணி திரும்பவும் நம்ம வீட்டுக்கு  அழைச்சுகிட்டு வந்தேன் ..

 …ஆனால்  …இந்த ஆக்சிடென்ட் மூலம் நல்லது ஒண்ணு  நடந்திருக்கு …”

“என்ன அது ?”

விமலாவுக்கு இருந்த  தற்காலிக அம்னிஷியா நோய்  பூரணமா குணமாகி   அவ நார்மல் ஆயிட்டா ..

” என்ன சொல்றிங்க? விமலாவுக்கு  தற்காலிக அம்னிஷியாவா? இது என்ன புதுக் கதை? என்ன சமாதானம் செய்ய விமலா சொல்லி நீங்க எழுதின கதையா?”

“கதை இல்ல …உண்மை!

 விமலாவுக்கு நிச்சயதார்த்ததுக்கு முன்னமே தற்காலிக அம்னிஷியா இருந்திருக்கு ..ஆனா நம்மையும் உங்க காதலை முறிக்கும் அளவுக்கு போகலை.

அன்னிக்கு பத்திரிகை புரூப் பை நீ எடுத்துக்கிட்டு போன போது அவ அந்த  நோயின் அதிக பட்ச  தாக்கத்தில்  இருந்ததால்தான் உன்னையே யார் என்று கேட்டாள் என்றும்

சம்பந்தி விளக்கம் சொன்னார்.  விமலா அப்போதிலிருந்தே  ட்ரீட்மென்டுக்கு ரெகுலராக போயிண்டடு இருந்திருக்கா..சொன்னா  நாம தவறாய் நினைப்போமே என்று பயந்து நம்மிடம் சொல்லாது மறைச்சிருக்கா.. ..அது எல்லா பெண்ணுக்கும் இருக்கிற ஒரு குணம்தான்..   நடந்த தப்புக்கு விமலா  என்கிட்டயும்  உங்க அம்மா கிட்டயும்   மன்னிப்பும்  கேட்டா .

இந்த விஷயத்தை உன்கிட்டஉடனடியா  சொல்லணுமுதான்கல்யாணத்துக்க்கு கூட போகாமல்  நாங்களும் காரை  அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு வீடு திரும்பினோம் …

ராஜு …மறுபடியும் சொல்றேன் 

விமலா அன்னிக்கு உன்கிட்ட வேணும்னு அப்படி நடந்துக்கல்ல

 …அவளுக்கு அன்னைக்கு அப்படி ஒரு சூழல்… மனநிலை…

அதனால இதை எல்லாம் புரிஞ்சுகிட்டு நடந்ததை மறந்து  அவளை மன்னிச்சு ஏத்துக்கோ ..

ஒரு வார்த்தை ‘எஸ்…ப்ரோசீட்னு சொல்லு… இப்போவே கல்யாண வேலைய  நான்  சுறுசுறுப்பாக ஆரம்பிக்கிறேன்   …என்ன சொல்ற ?

என்று ராஜுவின் அப்பா சொல்ல  சொல்ல   அவரையும் விமலாவையும் மாறி மாறி பார்த்தான் ராஜு .