இலக்கிய இன்பம் 20/கோவை எழிலன்

பிடி ஊட்டிப் பின் உண்ணும்

அது ஒரு சுட்டெரிக்கும் பாலைவனம். குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலை என்பது மரபு. குறிஞ்சி நில விலங்கான ஒரு யானைக் கூட்டம் வழி தவறி அப்பாலையில் மாட்டிக் கொண்டது. அங்கு நீர் அருந்த வழியில்லாமையால் நீர் தேடி அலைந்த யானைகள் ஒரு சிறு நீர்க்குட்டையைக் கண்டன.

நீர்க்குட்டையைக் கண்டவுடன் குட்டி யானைகள் அதில் விழுந்து அக்குட்டையைக் கலக்கி நீர் அருந்தின. பெரிய ஆண் யானையும் பெண் யானையும் அதைக் கண்டு கொள்ளாது தங்களது குட்டிகள் கலக்கிய நீரை அருந்த முற்படுகின்றன. அந்நீர் அவற்றிற்கு “தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்” போல் இருந்தது.

அதிலும் ஆண்யானை தன் துணையான பெண்யானையை முதலில் நீர் அருந்த வைத்து அதன் பின் நீர் அருந்துவது அதன் காதலைக் காட்டுகிறது.

பொதுவாக கணவன் சாப்பிட்ட பின்னே மனைவி சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஆபத்துக் காலத்தில் இத்தர்மம் மாறும். இதையே இக்கலித்தொகைப் பாடலடிகள் அழகாக வலியுறுத்துகிறது.

“அடிதாங்கும் அளவுஇன்றி
அழல் அன்ன வெம்மையால்
கடியவே கணங்குழாஅய்,
காடுஎன்றார், அக்காட்டுள்
துடிஅடிக் கயந்தலை
கலக்கிய சின்னீரைப்
பிடிஊட்டிப் பின்உண்ணும்
களிறுஎனவும் உரைத்தனரே!”