மழை நிலம்/வசந்ததீபன்


லேசாகத் தூறி
வேகமாய்ப் பெய்து
நின்று நனைந்தவைகள் சொட்ட மழைக்கவிதை
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
வள்ளல் பெரும் பசுக்கள் பாலைச் சொரிந்தன
காதலில் வாடிய சுடர்கொடி கதையானாள்
தூண்டில் முள்ளில் மாட்டி செத்தது மீன்
மீன் முள் சிக்கி உயிர் விட்டான் மனிதன்
மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது
புல்லாங்குழல் உதடுகளை சிநேகிக்கின்றன
விரல்களோடு வீணை உறவாடுகின்றன
இசை இதயங்களில் பூக்கின்றன
பிணத்தை தூக்கித் திரிந்து கருணை தேடுகிறார்கள்
படங்களைக் காட்டி இரக்கம் வேண்டுகிறார்கள்
மண்டையில மொளகா அரைக்கிறார்கள்
விலை கூவுகிறார்கள்
கடவுள்களாக பிம்பம் காட்டுகிறார்கள்
அன்பு கருணை கடைச்சரக்கு
மழையின் விழுதுகள் நிலங்களை ஆக்கிரமித்தன
பாம்புகளாய் சீறிப் பாய்ந்தன நீரோடைகள்
விதைகளெல்லாம் வெடிக்கக் காத்திருக்கின்றன
வெட்கத்தின் பின்னே காதல் ஒளிந்திருக்கிறது
விழிகளில் படபடப்பு சிறகடிக்கிறது
களி வெறி கொள்ளுதே நெஞ்சம்
கிளியாஞ்சட்டியில் உயிர் நிரம்பி இருக்கிறது
திரியில் குழந்தைகள் ஜனித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
வெளிச்சத்தை அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறேன்
மழைநீர்த் துளிக்குள் ஒரு தேவதை நாட்டியமாடுகிறாள்
வனமெங்கும்
சந்தோஷ சீழ்க்கையொலி
மலைராஜன் கம்பீரமாய் அமர்ந்தபடி ரசிக்கிறான்
சோற்றுக்கு அலையும் சிறு தும்பிகள்
அநாதரவாகித் துயருறும்
புள்ளிமான் குட்டி
பெருஞ்சிரிப்புடன் வனத்தை வட்டமிடும் எந்திரக் கழுகு.

🦀

One Comment on “மழை நிலம்/வசந்ததீபன்”

  1. அட…மழை நிலமா? மொத்தத்தில் இப்பூவுலக வாழ்க்கையா? கவிதைக்குள் எல்லாமே சின்ன டிஎன்ஏக்குள் ஏழேழு பரம்பரையின் உயிரியல் வரலாறு போல.

Comments are closed.