இனிக்கும் தமிழ் – 74/- டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம்- திருநாவுக்கரசர் பாடல்

வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே
.

சீர் பிரித்த பின்

வளைத்து நின்று ஐவர் கள்வர்
வந்து எனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றி
தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
ஆமை போல் தெளிவு இல்லாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
என்செய்வான் தோன்றினேனே

பொருள்

வளைத்து நின்று = சுற்றி நின்று, தப்பிக்க முடியாமல் வளைத்து நின்றுஐவர் கள்வர் = ஐந்து புலன்களாகிய கள்வர்கள்

நடுக்கம் செய்யத் = பயம் உண்டாக, தளர்வு உண்டாக

தளைத்து = தளை என்றால் பிணை, கட்டு, என்று பொருள். ஐம்புலன்களும் நம்மை
கட்டிப் போடுகின்றன.

வைத்து = வைத்து

உலையை ஏற்றி = உலையை ஏற்றி (நீரை கொதிக்க விட்டு)

தழல் எரி மடுத்த நீரில் = தீயினால் சூடாகும் அந்த நீரில் (மடுத்தல்
என்றால் எரிச்சல் உண்டாக்குதல். )
திளைத்து நின்று ஆடுகின்ற = சுகமாக அந்த நீரில் ஆடுகின்ற

ஆமை போல் தெளிவு இல்லாதேன் = மட ஆமை போல் தெளிவு இல்லாதேன்

இளைத்து நின்று ஆடுகின்றேன் = துன்பப்பட்டு ஆடுகின்றேன்

என்செய்வான் தோன்றினேனே = நான் என்ன செய்யப்போகிறேனோ
.
(ஆமைக்கு ஒரே சந்தோஷம். வெது வெதுப்பான நீர் எதுவரை காணாத இன்பம்
இங்கும் அங்கும் நீந்தி விளையாடி கொண்டிருந்தது.  கீழே சூடு நீர் மேலே
குளிர்ந்த நீர். சூடு இன்னும் முழுவதுமாக பரவவில்லை. ஆமை கீழே போகும்,
“ஆ…ரொம்ப சூடு” என்று மேலே வரும்…”இது ரொம்ப ஜில்லுனு” இருக்கு என்று
கீழே போகும்…ஒரே கும்மாளம் தான்.

நேரம் ஆக ஆக , தண்ணீர் சூடு ஏறும்….ஆமை சூடு தாங்க முடியாமல்
தவிக்கும்…போக இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலையும்…இறுதியில்
நொந்து வெந்து சாகும்.

அந்த முட்டாள் ஆமைக்கும் எனக்கும் என்ன வேறுபாடு ? புலன்கள் தரும் இன்பம்
தான் வெது வெதுப்பான நீர். சுகமாக இருக்கிறதே என்று அது வேண்டும், இது
வேண்டும் என்று அலைந்து தேடி சேர்க்கிறோம். மனைவி/கணவன் வந்தால் வாழ்க்கை
எவ்வளவு இனிமை என்று திருமணம் செய்து கொள்கிறோம், பின் பிள்ளைகள்
இருந்தால் இன்னும் சுகம் என்று அவர்களை பெற்றுக் கொள்கிறோம், பின் வீடு,
வாகனம், சொத்து என்று ஓடி ஓடி சேர்க்கிறோம்….எல்லாமா சந்தோஷத்தை
தருகிறது ?)