கலாச்சார பலாத்காரம் – சுஜாதா கட்டுரை

மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ஹாஸனில் (கர்நாடகா), இன்ஸாட்’ செயற்கைக் கோளின் கண்ட்ரோல் கேந்திரத்தைத் தொடங்கிவைக்கும் போது, ‘இந்தச் செயற்கைக்கோள் இந்திய விவசாயிக்குப் பருவ மழையைப் பற்றிச் செய்தி தரவும், இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும் உயர்தரக் கல்வி பரவுவதற்கும் உபயோகப்படும். அதற்குத்தான் இத்தனை செலவு செய்து ஸாட்டி லைட் அனுப்பியுள்ளோம்.’ என்று சொன்னார்.

சொல்லி இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இன்றைய தினங்களில் இன்ஸாட் – 1B என்னும் ஸாட்டிலைட் எந்த முறையில் பயன்படுகிறது? பார்க்கலாம்.

நாடு முழுவதும் Data collection platform என்று வைத்து வானிலைத் தகவல் சேர்த்து, மேலே செயற்கைக்கோளுக்கு அனுப்பி, அதை டில்லி யில் வாங்கி, கம்ப்யூட்டர்களில் போட்டு அரைத்துப் பதம் பண்ணி, படம் வரைந்து, தினம் ராத்திரி டி.வி செய்தி அறிவிப்பின் இறுதியில் ஒரு இந்தியா மேப் போட்டுக் காட்டி, மழை பெய்து கொண்டிருக்கும் இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சொல்லிவிட்டு, நான்கு மகா நகரங்களின் உஷ்ணம் சொல்லி விட்டு பென்சிலை மூடிவிட்டு, சிரித்துவிட்டுத் தேய்கிறார்கள். புயல் வரும்போது மட்டும் புயல் வரப்போகிறது என்றால் நெல்லூரில் நுழைகிறது என்கிறார்கள். நெல்லூர் என்றால் சிலோனில் கடக்கிறது.

இந்திய விவசாயிக்குப் புயல் பிரயோசனமில்லை. அவருக்குத் தேவை எப்போது விதைக்கலாம். எப்போது வாய்க்காலிலும் நதியிலும் தண்ணீர் வரும் போன்ற விவரங்கள்தாம். இந்த விவரங் களை இன்ஸாட்’ தருவதில்லை.

அடுத்து கல்வி: ஒரு நாளைக்கு இரண்டு முறை பிற்பகல் 12-45. மாலை 4 மணிக்கு யூ.ஜி.ஸி. பாடங்கள் ஒளிபரப்புகிறார்கள். இந்தப் பாடங்களின் ஒரு நாள் ஸாம்பிள்

முதலில் ஓம் விதி (Ohm’s law) பற்றிய பாடம். அடுத்து, Fourier Transform என்று கணிதத்தில் சிக்கலான பாடம். அதன்பின் ஆப்பிரிக்க தேசத்தில் குறைந்த செலவில் கக்கூஸ் கட்டுவதைப் பற்றி ஒரு சித்திரம். நேரம் பாக்கியிருந்தால் ‘பூட்டான்’ என்ற டாக்குமெண்டரி (பிலிம் டிவிஷன்) இருக்கவே இருக்கிறது. யாருக்குப் பாடம் இது? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

இப்படி விவசாயம், கல்வி என்று பெயர் பண்ணிவிட்டு, மற்ற நேரங்களில் வியாபார டெலிவிஷன், ஸாட்டிலைட் நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இதைப்போல ஒரு நாடு தழுவிய கலாச்சார பலாத்காரம் நவீன சரித்திரத்தில் கிடையாது. மிருணாள் சென் சொல்லும் மூன்று பைசா ‘பம்பாய் சித்ரஹார். கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுவதை நாம் கண்கொட்டாமல் கிரகித்துக் கொண்டிருக்கிறோம்.

முழுக்க முழுக்க சோப்பு பவுடர் விளம்பரங்கள். பானங்கள், சருமக் கலங்கல்கள், களிம்புகள், அலங்கரிக்கப்பட்ட குப்பைகள்! ஸூப்பர் ரின் உபயோகிப்பவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். உபயோகிக்காதவர்கள் தடுக்கி விழுந்து முட்டி மோதி அடிபட்டுக் கொள்கிறார்கள். ஃபேர் அண்ட் லவ்லி’ உபயோகிக்கும் பெண்களுக்கு கல்யாணம் ஆகிறது.ஒரு வி.ஐ.பி. ஸூட்கேஸ் வாங்கினால் 5000 ரூபாய் லாபம்.

விளம்பரங்களே பரவாயில்லை என்று சொல்லும்படி நிகழ்ச்சிகள். அமெரிக்க ‘ஸோப்’பின் மோசமான பிரதிகள் ‘Khandan’ என்கிற தொடர்கதையில் (டல்லஸ் டைனாஸ்டியில் போல) பணக்காரர்கள் பேரம்பேசி, சோரம் போகிறார்கள். ‘சுரம்சந்தில்’ பணக்காரர்கள் கொலை செய்து நகை விற்கிறார்கள். ‘யெ ஜோ ஹை ஜிந்திகி’யில் பணக்காரர்கள் கிச்சுகிச்சு மூட்டிக் கொள் கிறார்கள்.

விவாத நிகழ்ச்சிகளில் (போகஸ், பனோரமா) நரைத்த தலைக்காரர்கள், வழுக்கையாளர்களுடன் இங்கிலீஷ் பேசிப் பேசி மாய்கிறார்கள். செய்திகளில் அரசாங்க நெடி தூக்கி அடிக்கிறது. போதாக்குறைக்கு இந்தி!

இந்தி அறிவிப்பு, இந்தி விவாதம், இந்தி செய்தி, இந்தி கவிசம் மேளனம். இந்தி வர்ணனை… இந்தி தெரியவில்லையெனில் அந்த இந்திக்காரக்குட்டிகள் என்ன புடவை கட்டியிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

====================================

நேஷனல் ப்ரொக்ராம் ஆஃப் டான்ஸ் என்று ஒன்று உள்ளது. இதில் நடனம் ஆடுவதற்குக் கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்.

  1. உங்கள் கணவர் ஐ.ஏ.எஸ் ஆபீசராக இருக்க வேண்டும்.
  2. உங்களுக்கு 50 வயது நிறைந்திருக்க வேண்டும்.

டெலிவிஷனில் நல்லதே இல்லையா?

இருக்கிறது.

புதன்கிழமை ஒளிபரப்பாகும் எம்.ஜே.அக்பரின் ‘நியூஸ்லைன்’ (இது அதிக நாள் தாங்காது.) வியாழன் ‘ஏக்கஹானி’ (வாரம் ஒரு இந்திய இலக்கியச் சிறுகதை), ஞாயிறு வால்ட் டிஸ்னி’, ‘தர்பண்’, மாலை ‘வர்ல்ட் ஆஃப் ஸ்போர்ட்’டின் சில பகுதிகள். க்விஸ்டைம். க்வஸ்ட் (கல்கத்தா நிலையத்தின் விஞ்ஞான க்விஸ்) பி.பி.ஸி. க்ரானாடா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில நிகழ்ச்சிகள் (சர்வைவல்,ஸிவிலிஸேஷன்). கார்ள் ஸேகனின் ‘காஸ்மாஸ்’ இவைகளையெல்லாம் இந்திய விவசாயிக்கு வந்தனத்துடன் ரசிக்சிறேன்.

ஜனவாணியின் சில கேள்விகளும், போதைப் பொருள்கள் ஊதுபவர்களையும் சிவப்பு விளக்கு விபசாரிகளையும் நேர்முக மாகக் கண்ட சில அப்பட்டமான பேட்டிகளும் இந்தச் சாதனத்தின் உண்மையான சக்தியை நிரூபித்தாலும், இந்தி தெரியாமல் இந்திய டெலிவிஷனை ரசிப்பது கஷ்டம்தான்.

======================================

எர்னஸ்ட் ஹெமிங் வேயின் சிறுகதைகள் சமகால எழுத்தாளர் கள் அத்தனை பேரையும் பாதிக்கிறது என்று சொல்வார்கள். அவர் சொன்னது:
‘நான் பார்ப்பதை, உணர்வதை, என்னால் முடிந்தவரை மிகச் சிறந்த மிக எளிய முறையில் எழுதுவதே என் குறிக்கோள்.’

(நன்றி: சின்னச் சின்னக் கட்டுரைகள் – தொகுப்பிலிருந்து)