பதுங்கும் நண்டுகள்!/கு. மா. பா. திருநாவுக்கரசு

முழங்கால் தெரிய
முரட்டுத் துணி காற்சட்டை!
கிழிந்து தேய்ந்த காலணி!
மேற்சட்டையை மூடிய
கந்தலான கம்பளி ஆடை!
குழிவிழுந்தக் கன்னமுடன்
கோர முகம்! கருப்பு நிறம்!

கடுங்குளிரில்
கையில் ஒரு பதாகை!
“வீடில்லை! வேலையில்லை!
கையேந்தி நிற்கிறேன்…
கருணை காட்டுங்கள்! “
பிச்சை எடுக்க
அனுமதியற்ற இடத்தில்,
ஒருவனின் வயிற்றுப் பசி
விதிகளை மீறி
வேறு வழியற்று
கவனத்தை ஈர்க்கிறது!

மகிழுந்துகள் விரைவாக
பறந்து கொண்டிருந்தாலும்,
அந்த நான்முனைச் சந்திப்பில்,
விதிகளை மீறாமல்
நின்று கவனிக்கும் என்பதால் – அந்தப்
பதாகை, பயணிகள் சிலரின்
பார்வையை நனைத்தது!
சிகப்பொளி கருணையைக்
காட்டும் முன்பே
பச்சை விளக்கு பரபரப்பூட்டி
பசியாற்றாமல்
பார்வையைத் திருப்புகிறது!

நகர்வலம் வரும் காவலின்
பார்வையில் படாமல்
நலிந்த வறுமை – கடுங்
குளிர் இரவிலும்
“கையது கொண்டு
மெய்யது பொத்தி,
காலது கொண்டு
மேலது தழுவிடினும்”
சத்திமுத்த புலவர் போல்
சத்தமிட்டுப் பாட இயலாமல்,
கடலின் அலையோசையிலும்
காலடி அரவம் கேட்டு,
பக்கவாட்டில் ஓடி வலைக்குள்
பதுங்கும் நண்டுகள் போல்,
இரை தேட முடியாமல்
வறுமையில் உழல்வாரை
வருத்தும் வல்லரசுகள் இன்று!


  • நாள்: 19/12/2021