ஆணிகள் அறையப்படுவற்கில்லை /♦அனங்கன்

வாடகைவீட்டில் நிபந்தனைகளில் ஒன்று
ஆணி அடிக்கக்கூடாதென்பது.

எனக்குக்கூட இயேசுவை ஆணியில் அறைந்ததில்
இருந்து ஆணிஅறையப்பிடிக்காது.

மனைவிக்கு மளிகைக்கடையிலிருந்து…
நகைச்சீட்டுவரை பலவண்ண நாட்காட்டிகள்
குவிந்துவிடும்.

வரம்கொடுக்க தெய்வங்கள் கைஉயர்த்தி
நின்றாலும்…இந்தவீட்டில்
மூலையில்தான் கிடக்கவேண்டும்.

கிழிக்கப்படாத நாட்காட்டிகள் அடுத்த
ஆண்டுவரை அப்படியே இருக்கும்.

இந்தப்படங்களை மாட்டவாவது ஒரு சொந்த
வீடுவேண்டுமென்ற வெறியில்…கடனில் வீடுகட்டினோம்.

இப்போது நாங்களும் வீடு வாடகைக்கு விட்டிருக்கிறோம்…
ஆணி ஏதும் அடிக்கூடாது என்ற நிபந்தனையோடு.

நாட்காட்டிகளைப் பற்றி கேட்கிறீர்களா…
இப்போதெல்லாம் மூலையில் போடுவதில்லை…பரணில்
அடுக்கிவைத்து விடுகிறோம்.