சாதாரண நாள்அல்ல/செ.புனிதஜோதி

தினமும் குப்பைஅள்ளும்
கோமதி அக்காவுக்கு
இது சாதாரணநாள் அல்ல…
நிறைந்துவழியும் பட்டாசுக்காகிதத்தில்
கனன்று கொண்டிருந்த
கங்கின் சூடுபடும் நாளது…

செல்வா அண்ணாவுக்கு
பீர்பாட்டிலின் சிலும்பல்
குத்தி ரத்தம் வந்த நாளது…

நிறைந்து வழிந்த கேளிக்கை
குப்பைகளை வழித்து அள்ளியதில்
இடுப்புநொடிந்த நாளது
சுந்தரம் அண்ணாவுக்கு…

இரவுவரை கோயில்களிலும்
,பீச்சிலும்,
மாலிலும் சுற்றித் திரிந்தகால்கள்
சோர்ந்தக் காரணத்தால்
விடிந்தும் எழாமல்
அன்னதானம் பெறுபவருக்கு
பட்டினிநாளது..

அதனால் தான்
சொல்கிறேன்
புதுவருடம்
சாதாரண நாள் அல்ல
சாமானியனுக்கு.