
வருகின்ற நாளெல்லாம்
வளத்தோடு வரவேண்டும்.
தருகின்ற பயனையிங்கு
தழைத்தோங்கித் தரவேண்டும்.
உருவாகும் எண்ணத்தில்
உயர்ந்தோங்கும் நிலைவேண்டும்.
திருநாளாம் புத்தாண்டில்
திசையெட்டும் ஔிவேண்டும்.
உருமாறும் தீநுண்மி
உலகைவிட்டு ஒழியவேண்டும்.
கருத்திலிங்கு ஒன்றுபட்டு
கடிதோச்சி எறியவேண்டும்.
அருள்கொண்ட மனதோடு
அனைவரிடம் நெறிவேண்டும்.
பருவமழை தப்பாது
பாரெல்லாம் தழைக்கவேண்டும்.
வறுமையென்றும் வாராது
வாழ்வுநிலை உயரவேண்டும்.
சிறுமைகொண்ட எண்ணமதை சீர்தூக்கி
விலக்கவேண்டும்.
பொறுமையோடு எளியோரைப் பொருட்படுத்தும்
மனம்வேண்டும்.
நறுமணமாய் நல்வாழ்வு
நானிலத்தில் தினம்வேண்டும்.
♦
