
ஆண்டுக்கு ஆண்டு
வருகிறது புத்தாண்டு!
தாண்டிக் கடந்திட தான்
தகிடுதத்தம் போடுதிங்கு!
நேர்மறையாகத் தான்
நியாயமான எண்ணங்களை
புத்தாண்டு நாளில்
வாழ்த்து மலர் ஆக்குகிறோம்!
ஏனோ… எதிர்மறையாக வரும்
எண்ணற்ற நிகழ்வுகளைக் கடந்து,
இலக்கிற்கு எதிர்த்திசை தான்
எதிர்நீச்சல் போடுகிறோம்!
பிரார்த்தனை தலம் கூடி
குறையழவும் வழியுமில்லை!
பிள்ளைகள் தரமுயர்த்தும்
கல்வி நலம் சூழவில்லை!
வேலை வாய்ப்பு பெருகவில்லை!
விலைவாசி குறையவில்லை!
எரியுருளை, எரியெண்ணெய்
விலை எதுவும் சரியவில்லை!
ஆளை விழுங்கும் தீநுண்மி
ஆட்ட மாற்றம் காணுவதும்,
பாதகமாய்ப் பரவிவரும்
சோதனைகள் தொடராமல்,
வேதனைகள் தீர்வதற்கு
சூழ்நிலைகள் கைகொடுக்க,
சூட்சுமத்தை அறிந்திடுவோம்!
விடிகின்றப் புத்தாண்டு
ஒளிமயமாய் பிறக்கட்டும்!
வீங்குகின்ற நிலைமைகளைத்
தாங்குகின்ற சக்திதனை
ஏங்கி நிற்கும் மக்களுக்கு
இனிவரும் நாள் வழங்கட்டும்!
சமூகக் கடமையென மறவாமல்
தடுப்பூசி போட்டிடுவோம்!
‘வடை போச்சே!’ என்று இனி
வருந்தாமல் விடைகள் கண்டு,
வல்லமையால் வளங்களுடன்
இல்லாமைத் துயர் நீக்கி
எல்லோரும் வெற்றி காண
விடியட்டும் புத்தாண்டு!
,
