புத்தாண்டே வருக!/ செல்விபிரகாஷ்🌹

புதுப்பெண் மனதைக்கொண்டு
புத்தாண்டே வருக! வருக!
புதுப்புனல் வாசம் தந்து,
புவிதன்னை நிரப்ப வருக!
மதுக்குடச் சுவையை தந்து,
மங்கல ஆண்டே வருக!

சீர்மிகுச் செல்வம் யாவும்
செழிப்புடன் காக்க வருக!
பார்மிகுத் துன்பம் ஒழிய
பசுமையின் வண்ணம் தருக!
வேரென நிலைத்துக் காக்கும்
வசந்தத்தின் ஆட்சி நிறைக!

விவசாய மக்கள் நெஞ்சம்,
விதவிதமாய்ப் பூக்கள் பூக்க
புவனத்தையாளும் மக்கள்
புரிந்து நல்லாட்சி நல்க!
அவலங்கள் போக்கியென்றும்
அமைதியைக்காக்க வருக!

சென்றதோர் ஆண்டின் பங்காய்,
செறிந்த நல் நெஞ்சம் கொண்டு,
வென்றிடும் வாழ்வின் துன்பம்,
வாய்த்திடும் வழிகள் தந்து,
கன்றுடன் தாய்போல் பந்தம்,
கனிவுடன் மண்ணில் வாழ்க.

உழைப்பவர் மண்ணில் என்றும்,
உயர்ந்தநல் இன்பம் தூய்க்க.
பிழைக்கின்ற வழியே மனிதன்,
பிணைகின்ற புதினம் காட்டி
தழைக்கின்றச் சிறப்பையள்ளித்,
தரப்போகும் ஆண்டே வருக!