
மார்கழிக் கவிதைகள்: 19
அரசியல் வாதிக்கும் அரசியல் ஞானிக்கும்
அளவுகள் என்ன சொல்லு ?
கரவொலி தந்துனை களிப்புறச் செய்குவேன்
கடகட வென்று கூறு.
இல்லாத ஒன்றினையே இருப்பதுபோல் காட்டுவது
இந்நாள் அரசியல் வாதி
பொல்லாத பூமியிலே பொய்யின்றி நன்மைகளைப்
பொழிவர் அரசியல் ஞானி
வாக்கொன்று தந்தபின்பு வகைமாறிப் பேசுகின்ற
வலியோன் அரசியல் வாதி
காக்கின்ற தெய்வமெனத் தன்னையே நாட்டிற்காய்த்
தருவோன் அரசியல் ஞானி
தன்குடும்பம் தன்பதவி தன்பெருமை பேசுகிற
தப்பே அரசியல் வாதி
தன்னுடைய தேசத்து சந்ததிகள் வாழ்வுயரத்
தவிப்போன் அரசியல் ஞானி
எந்தெந்தத் திட்டங்கள் எப்போது வந்தாலும்
எடுபோன் அரசியல் வாதி
சொந்தங்கள் ஆனாலும் பொதுச்சொத்தைத் திருடினால்
உதைப்போன் அரசியல் ஞானி
கல்விக்காய்க் கட்டணங்கள் கறக்கின்ற கொள்கையினைக்
கண்டோன் அரசியல் வாதி
கல்விக்கண் திறப்பதற்கே கனவுகளை நனவாக்கக்
கற்றோன் அரசியல் ஞானி.
(03.01.2022)
