
குடுகுடு என்றுக் கொட்டும் மழையில்
குரங்கு ஒன்று நனைந்து வந்தது
படபட என்றுப் பறக்கும் குருவிகள்
பார்த்தன தங்கள் கூட்டி லிருந்தே
”குரங்கே! குரங்கே” கூவி அழைத்தன
குரங்கு மேலே நிமிர்ந்து பார்த்தது
”மரத்தின் மேலே கூடுகள் கட்டி
மழையில் நனையாமல் வாழ்ந்து வருகிறோம்
உனக்குக் கைஉண்டு கால்களும் உண்டு
உழைத்துச் சிறிய வீட்டினைக் கட்டி
நனைந்தி டாமல் உள்ளிருக் கலாமே”
உண்மை அன்புடன் குருவிகள் உரைத்தன
”தன்னை விடவும் தாழ்ந்த குருவிகள்
தனக்கே அறிவுரை சொல்வதா” என்று
சின்னக் குரங்கு தவறாய் நினைத்து
சினத்துடன் மரத்தில் ஏறிய துடனே
கூட்டைக் கைகளால் பிரித்துப் போட்டது
குருவிகள் பாவம் மழையில் நனைந்தன
ஆட்டம் போட்டு மகிழ்ந்த குரங்கு
அங்கே உடனே இப்படிச் சொன்னது
”எனக்குக் கைஉண்டு கால்களும் உண்டு
எனக்கு வீட்டைக் கட்ட முடியாது
எனக்குக் கூட்டைப் பிரிக்கத் தெரியும்”
என்று சொல்லி ஓடிப் போனது
முழுதும் நனைந்த குருவிகள் அழுதன
மூடர் தமக்கே அறிவுரை சொல்லும்
வழியை நாமும் விட்டு விட்டால்
வாழ்வில் இன்பம் அடைந்தி டலாமே!
