
வாசனைகளாலானது
வாழ்க்கை
வண்ணங்களுடனான
உலகுக்கு
பழகுமுன்னே
வாசனைகளாலான
உலகுக்குப்
பழகுகிறது
மனித உயிர்.
நேற்று பிறந்த குழந்தை
தாய்ப்பால் வாசனையில்
தாய் முகம் பார்க்கிறது.
ஸ்பரிசங்களுக்கு
எட்டாத ஒன்று
வாசனையில்
வசப்படுகிறது.
காதலாகி கசிந்துருகி
கிடக்கையில்
கிடைக்கும்
முத்தத்தின் வாசனை
ரத்தத்தைச் சூடாக்குகிறது.
பக்கத்து அறை
கலவி வாசனை
கதவு கடக்கையில்
தனிமையைக்
கட்டியணைத்துக் கிடந்தவன்
உடல்
முறுக்கேறித் தணிகிறது.
தன்னுடல் வாசனை
தனக்கே எதிரியாகும் போது
வாசனை மறைக்கும்
புகை மண்டலத்தில்
தன்னைத் தணித்து
வெளியேறுகிறவனுக்காக
காத்துக்கிடக்கிறது
விளம்பரங்களின் உலகு.
நம் வாசனை
நம் உடலுக்குள்
மறைய
நாம் சாயும் வேளை
நம்மை
சுமக்கின்றன
வேறு வேறு
வாசனைகள்.
–
