தன்வலி/வசந்ததீபன்

நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
அடைபட்டிருக்கின்றன
பெயரற்ற
ஆயிரமாயிரம் பறவைகள்
நான் நடக்கிறேன்
நேரம் நடக்கிறது
யாருடன் யார்?
கூட வருவது…
மனிதர்கள் மெளனிக்கையில்
பறவைகள் பாடுகின்றன
வாழ்வின் தீராத
பெரு மகிழ்ச்சியை..
தற்செயலின் தருணங்களை
தழுவிடும் போதிலே
நழுவி ஓடுகிறது
நான் பிடித்த முயலாய்…
நதிக்கரையில்
நின்றிருந்தாலும்
தாகம்
தணியாமல்…
அதிகாலை மனசில்
நதியாய் ஓடும்
பூவாய் கமழும்
ஊற்றெடுக்கும் கற்பனைகள்
இனி சொல்வதற்கு வர்த்தைகளில்லை
அழுவதற்கு கண்ணீர் மிச்சமில்லை
காட்டில் பசியோடு அலையும்
குறுமான் நான்
இலை உதிர்ப்பது போல்
துக்கம் வந்தால் அழுகிறேன்
பூப்பது போல் சந்தோஷமானால் சிரிக்கிறேன்
இதயமுள்ள மரமாய் வாழ்கிறேன் எளிய மனிதன் நான்
சொன்ன சொல் திரும்பவில்லை
சொல்லி அழ யாருமில்லை
சொல்லும் கதை தீரவில்லை
🦀