
1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹைக்கூ கவிதைகள் மேல் ஈடுபாடு கொண்டு எழுதியதோடு நில்லாமல், தனது முதுமுனைவர் பட்டத்துக்கு ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டு, தமிழில் முதல் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் எனும் சிறப்பையும் பெற்றார். பல மாணவர்களைக் கவிஞர்களாக மாற்றிய பெருமைக்குரியவர். மாணவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, அவற்றைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டார். ‘சித்திரை வெயில்’, ‘தாகம் தீரா வானம்பாடிகள்’, ‘நிரந்தர நிழல்கள்’, ‘காற்றின் சிறகுகள்’ ஆகிய புதுக்கவிதை நூல்களையும், ‘ஹைக்கூ கவிதைகள்’, ‘குடையில் கேட்ட பேச்சு’, ‘மௌனம் சுமக்கும் வானம்’ ஆகிய ஹைக்கூ கவிதை நூல்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். கவிதைகள் தொடர்பான 6 ஆய்வு நூல்களையும், கண்ணதாசன், பாரதிதாசன் படைப்புகள் குறித்த 2 ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக வலம்வந்த கவிஞர் மித்ராவின் 2,000 ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலத்திலும், 1,000 ஹைக்கூ கவிதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
*
காற்றின் சிறகுகள்
முறிபடும் முட்களில்
வருந்தும் மேகம்.
*
மெல்ல நட குருவியே
உடைந்து விடப் போகிறது
புல்லில் பனித் துளி.
*
பழம் கோயில்களில்
நூற்றாண்டு கதை பேசும்
ஆலமரங்கள்.
*
இரவு முழுவதும்
தூங்க விடவில்லை
குயிலின் சோகம்.
*
பின்னிக் கிடக்கும்
சிலந்தி வலைச் சிக்கல்கள்
வாழ்க்கை.
*
பறி போனது
அணிலின் சுதந்திரம்
கிளைகளில் தேன் கூடு.
