கம்பனைக் காண்போம்—24 /வளவ. துரையன்

                   
                       ஐவகைத்தேன்                            

         ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்
         சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்
         மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி வங்க
         வேலைவாய் மடுப்ப உண்டு மீன்எலாம் களிக்கும் மாதோ             [41]

[அரிதலை=அரியப்பட்ட நுனி; தொடை இழி இறால்= அம்பு தொடுக்கப்பட்ட தேன்அடை; வரம்பு=எல்லை; வங்கம்=கப்பல்; வேலை=கடல்; மடுத்தல்=கலத்தல்; மாதோ=அசைச்சொல்]

கரும்பாலைகளில் இருந்து கருப்பஞ்சாறாகிய தேன் ஓடி வருகிறது. தென்னை, பனை மரங்களின் நுனி அரியப்பட்டு அதன் பாளைகளிலிருந்து கள்ளாகிய தேன் ஓடுகிறது சோலைகளில் உள்ள மரங்களின் பழங்களிலிருந்து பழச் சாறாகத் தேன் ஓடி வருகிறது. அம்பு தொடுக்கப்பட்ட தேன் அடைகளிலிருந்து தொடர்ந்து தேன் ஓடி வருகிறது. மக்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்து தேன் ஓடி வருகிறது. இந்த ஐவகைத் தேனும் எல்லை கடந்து ஓடிக் கப்பல்கள் உலவும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் எல்லாம் உண்டு களிக்கின்றன.

’தொடை இழி இறால்’ என்பது அருமையான சொல்லாட்சி. வேடர்கள் தேனெடுக்க தேனடையை நோக்கி அம்பு எய்வார்கள். அம்பு அந்த அடையில் துளையிடும். அத்துளை வழியே தேன் இடைவிடாது அம்பின் வழியே அம்பின் அடி நுனியில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒழுகும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அடைக்கும் சேதமேற்படாதவாறு, தேனீக்களுக்கும் துன்பம் செய்யாமல் தேனெடுக்கும் வழியைக் கம்பன் அறிந்திருக்கிறான். கடலுக்கு அடைமொழியாக வங்கம் எனும் சொல்லைக் கையாள்கிறான். அது வங்கக்கடல் என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் சொல்வதாகும்.