உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது/எம்.டி.முத்துகுமாரசாமி

.

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு ஊரெல்லையில் இருந்த புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி சாவதைப் போல நாக்கைத் தொங்கவிடுவது என்று பாவனைகள் மட்டும் செய்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். புளியமரக் கொப்பில் வசித்து வந்த சங்கீத வித்துவான் பேய் ஒன்றிற்கும், அதன் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் முல்லா நஸ்ருதீனின் பாவனைகள் புரிபடவில்லை. வித்வான் பேய் தன் ஃபேஸ்புக் நண்பர்கள் புடை சூழ முல்லாவை அணுகி “நஸ்ருதீன், அந்த மிருதங்கத்தை வைத்து என்ன செய்கிறாய்?” என்று கேட்டது. நஸ்ருதீன் சொன்னார், “ சீர்காழி கோவிந்தராஜன் பாடலை சித் ஶ்ரீராம் உணர்ச்சிகரமாகப் பாடினாரில்லையா, அது போலவே சிவாஜியின் மிருதங்கச் சக்கரவர்த்தி படத்தைப் பார்த்து மிருதங்கம் வாசிக்கிறேன்.”