
தீட்டிய கையை மடக்கு!
நனையாதே!
வீட்டுக்குள் வேண்டுமென்றால்
விடு கண்ணீ ர்!
………………………………
காலம் கருத்துக்குள்
கட்டுப் படுமுன்பே
கற்பரசி வான்மதியாள்
ஞாலம் வலம் வருவாள் :
ஆணழகன் ஆதவனை
அணுகும் பொழுதெல்லாம்
நாணி முகம்மெதுவே
மறைக்கின்றாள் தினந்தோறும்!
கூடி முயங்குகிற
குறிப்பிட்ட நாளன்று
மூடுகிறாள் இருட்போர்வை
முகம் முழுதும்!
கற்பரசி அன்னவளின்
கையைப் பிடிக்காதே!
தற்கொலை தான் செய்து கொள்ளத்
துணிந்துவிட்டாள் விட்டுவிடு
…………………………….
சாகட்டும் சந்திரிகை;
செத்த பிறகேனும்,
காதல் களியாட்டக்
கிறுக்குக்கும், பெண்ணென்றிங்கு
ஏதோ பிறந்தாலும்
போதும் முகத்துக்கும்,
ஏகத்துக் கவளை
இழுத்துக் கற்பனையின் (2)
போகப் பொருளாக்கிப்
பொலிவுத் துகில் கிழித்துத்
\தேகம் கிழக்கூடாய்த்
தேயும்வரை முயங்கிப்
பாட்டெழுதும் கவிராயர்…….
(சாகட்டும் சந்திரிகை ;
செத்த பிறகேனும்)
பேச்சற்றுப் போகட்டும்!
பேனா மடங்கட்டும்!
ஓய்ச்சல் ஒழிவின்றி
ஊறும் கிழக்கவிதை
மூச்சடங்கிப் போகட்டும்
மூங்கில் சுமையாக !
வானத்து அகலிகையின்,
வையத்துக் கவீந்திரர்,
மானம் அழித்துவிட்டார்!
மறக்கக் கிணறடைந்தாள்!
……………………………………..
தொட்டுத் தூக்கிவிடத்
துறுதுறுக்கும் கையிரண்டும்
வெட்டி எறிந்துவிடு!
வேண்டு மென்றால்
விடு கண்ணீ ர்!
……………………….
தொட்டால் உருக்குலைவாள்!
தொடர்ந்துவரும் பெண்சாபம்!
