ஜனவரி 6: ஜனவரி 6: வேட்டி தினம்

*தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்றவற்றை அன்று இந்தியர்கள் அறிந்ததே இல்லை.
ஆனால் ஆங்கிலேயே ஆட்சிக்குப் பின் நிலை முற்றிலும் தலைகீழாக மாறியது. எல்லாவற்றிலும் ஆங்கிலேயரைப் பின்பற்றிய நாம் உடை விஷயத்திலும் அவர்கள் கலாசாரத்தைப் பின்பற்றலானோம்.
தலைக்கு வெளியே குடுமி போய் கிராப் வந்தது. தலைக்கு உள்ளேயும் ஆங்கிலக் கலாசாரச் சிந்தனைகள் நிறைய விதைக்கப்பட்டன. இடுப்பிலிருந்த வேட்டி தானாய் நழுவி, அங்கே பான்ட் மிக இயல்பாய் இடம்பெறத் தொடங்கிவிட்டது.
ஒருகாலத்தில் வேட்டிகளால் மட்டுமே நிறைந்திருந்த இந்தியாவிலும் அதன் ஒரு பகுதியான நம் தமிழகத்திலும் இன்று வேட்டி அணிபவர்கள் எண்ணிக்கை சொற்பமே.
தமிழக அரசியல்வாதிகள் பலர் வேட்டி அணிகிறார்கள் என்பதால் (அந்த ஒருவகையில் மட்டும்!) அவர்களைப் பாராட்டலாம்.
முன்பெல்லாம் மூலகச்சம், பஞ்ச கச்சம் எனப் பெரிய வேட்டியை விதம்விதமாய்க் கட்டிக் கொள்வதுண்டு. டபிள் வேட்டி என சாதாரண வேட்டியைப் போலவே இரண்டு மடங்கு அளவில் நீளமுடைய வேட்டிகள், இன்றும் கடைகளில் வாங்கக் கிடைக்கின்றன.
சில பிரிவினரில் திருமணமான ஆண்கள் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இரு மடங்கு நீளமுள்ள வேட்டியைப் பஞ்சகச்சமாய்க் கட்டும் மரபு இருந்தது. திருமணம் ஆகாத ஆண்களுக்கு வேட்டியை அப்படிக் கட்டும் உரிமை கிடையாது!
இப்போதும் சில பிரிவினர் சமயச் சடங்குகள் நடத்தும் போது அவர்கள் திருமணமான ஆண்களாக இருந்தால் பஞ்சகச்சம் என்ற பாணியில்தான் வேட்டி அணிந்து அந்தச் சடங்கை நிகழ்த்துகிறார்கள்.
ஆந்திரக் கலாசாரத்தில் ஊறியவர்கள் கட்டுவதும் ஒருவகை வேட்டிதான். அது சராசரி வேட்டியை விட அதிக நீளம் உடையது.
இடுப்பைச் சுற்றி ஒரே ஒரு சுற்றாக எளிமையாய்க் கட்டப்படுவதற்குத் தட்டுச்சுற்று என்று பெயர். பெரும்பாலானோர் தட்டுச்சுற்று கட்டுபவர்கள்தான்.
திருமணம் போன்ற மங்கல தினங்களிலும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களிலும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினார்கள்.
சாதாரண நாளில் ஒருவர் பட்டு வேட்டி கட்டிக் கொண்டு தெருவில் நடந்துபோனாலே அன்று அவர் தொடர்பான ஏதோ மங்கல விசேஷம் என்று பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
கேரளத்தில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் வேட்டி அணிவதுண்டு. இடுப்பில் வேட்டி அணிந்து, மேலே மாராப்பாக இன்னொரு வேட்டியைப் போர்த்திக் கொண்டு மிக எளிய உடையணியும் பெண்களை இந்தியாவில் கேரளத்தில் மட்டுமே நாம் பார்க்க முடியும்.
நம் தமிழகத்தைச் சார்ந்த பொதுவுடைமை இயக்கப் போராளி மணலூர் மணியம்மையின் வாழ்க்கை குறித்து, பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பாதையில் பதிந்த அடிகள் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான ஒரு நாவல் எழுதியுள்ளார்.
இந்த நாவலுக்கான ஆதாரங்களைக் காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் சின்னக் குத்தூசியிடமிருந்தும் தமிழகத்தின் பல இடங்களில் கள ஆய்வு செய்தும் ராஜம் கிருஷ்ணன் திரட்டினார்.
மணலூர் மணியம்மை ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என வேட்டி கட்டி வாழ்ந்தவர் என்பது வியப்பளிக்கும் ஓர் உண்மைச் செய்தி.
ஒரு மானால் முட்டப்பட்டுக் காலமான அவர் வரலாறு, சமூக சேவையின் பெருமை, பொதுவுடைமைக் கொள்கையின் பெருமை, பெண்ணுரிமையின் பெருமை போன்றவற்றைப் பேசுவதோடு கூட, மறைமுகமாக வேட்டியின் பெருமையையும் சேர்த்தே பேசுகிறது.
உடை என்பது பெரும்பாலும் வசதியைப் பொறுத்தே புதுப் புது வடிவங்களை எடுக்கிறது. அப்படிப் பார்த்தால் பான்ட் தான் வசதி என்று பலர் கருதுகிறார்கள். பான்ட்டில் இல்லாத ஒரு வசதி வேட்டியில் உண்டு.
பான்ட்டை மடித்துக் கட்ட முடியாது! மழைக்காலங்களில் வேட்டி அணிபவர்கள் மிக இயல்பாக அதை மடித்துக் கட்டிக்கொண்டு மழைநீரைக் கடக்க முடியும்.
பான்ட்டில் உள்ளது போலவே இப்போது பாக்கெட் வைத்த வேட்டிகளும் வரத் தொடங்கியுள்ளன.
இன்று மகப்பேறின்மை பல குடும்பங்களில் ஒரு பிரச்னையாக உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை பான்ட் போன்ற இறுகிய உடை இதற்கான காரணங்களில் ஒன்று என்ற கருத்தும் நிலவுகிறது.
வேட்டி சுகாதாரமானது. காற்றோட்டமானது. வெயில் காலத்திற்கு மிக மிக ஏற்றது.
ஆனால் நாம் பகுத்தறிவே இல்லாமல் அல்லவா செயல்படுகிறோம்? இந்த வெய்யில் நாட்டில் பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் ஷ¥ போட்டு அனுப்புகிறோமே? முற்றிலும் ஆரோக்கியக் கேடான இந்த வழக்கத்தைப் பின்பற்றுமாறு பள்ளிகளே வற்புறுத்துகின்றனவே?
வெப்பத்தில் புழுங்கும் குழந்தைகளின் சின்னஞ்சிறு பாதங்கள் என்ன ஆகும் என்று நம்மில் யாராவது யோசிக்கிறோமா?
வேட்டி அணியத் தயங்குபவர்கள் சொல்லும் ஒரு சாக்கு, வேட்டி இடுப்பிலிருந்து நழுவிவிடுமோ என்ற அச்சம். அணிந்து பழகிவிட்டால் வேட்டி ஒருபோதும் இடுப்பிலிருந்து நழுவாது. அல்லாமலும் அப்படி உணர்பவர்கள், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உதவ, பெல்ட் அணிந்து கொள்ளலாம்!
(ராம்ராஜ் காட்டன் வேட்டிகளுக்கு வெல்க்ரோ என்ற வகையிலான துணியாலான பெல்ட்டுகளே விற்பனை செய்யப்படுகின்றன.)
முன்பு ஐந்து நட்சத்திர அந்தஸ்து உடைய பெரிய உணவகங்களில் வேட்டி அணிந்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்ற விதி இருந்தது. நம் பாரம்பரிய இந்திய உடைக்கு இப்படியொரு நிலை!
ம.பொ.சி.யை ஓர் ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேச அழைத்தார்கள். அவர் அழைக்கப்பட்ட பேச்சாளர். அவர் வேட்டியைத் தவிர வேறேதும் உடுத்தாதவர். அந்த உணவகம் அவருக்காக விதியைத் தளர்த்தியது.
அவர் தம்முடன் தமது ரசிகர்கள் சிலரையும் வேட்டி கட்டியவர்களாக அழைத்துச் சென்றார். உணவகம் வேறு வழியின்றி வாய்மூடி மெளனம் காத்தது.
பிறகு வேட்டி கட்டியவர்களை உள்ளே அனுமதிக்காத உணவகங்கள் குறித்துப் பத்திரிகைகளில் விவாதங்களும் எழுந்தன. இப்போதும், சில உணவகங்களிலும் சில கிளப்புகளிலும் வேட்டி வரவேற்கத் தக்க உடையாகக் கருதப்படுவதில்லை.
வேட்டி தினம் கொண்டாடும்போது இந்த நிலையையும் மாற்றுவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
ஆண்கள் வேட்டி அணிவதன் மூலம் பாரம்பரியச் சிறப்பைக் காப்பாற்றுகிறோம் என்பது மட்டுமல்ல, விஞ்ஞான பூர்வமாக நம் வெய்யில் தேசத்திற்கு ஏற்ற ஆடையைத் தேர்வு செய்து அணிகிறோம் என்பதையும் பெருமிதத்தோடு உணர முடியும்.
(மீள் பதிவு.)
