அப்பாவும் வேஷ்டியும்/ரேவதி பாலு

எனக்கு நினைவு தெரிந்த நாளாக அப்பாவை எப்பொழுதும் கதர் வேஷ்டி ஜிப்பாவில் பார்த்து தான் பழக்கம். இரண்டு செட்டு தான் வைத்துக் கொண்டிருப்பார். அதை தினமும் துவைத்து போட்டு உடுத்திக் கொள்வார். ஒரு அறுபது வருஷங்களுக்கு முன்னால அலுவலகத்திற்கு வேட்டிதான் உடுத்திக் கொண்டு போவார்கள் ஆண்கள். ஞாயிற்றுக்கிழமை ஆனால் அம்மாவிடம் கேட்டு சாதம் வடித்த கஞ்சியை வாங்கி அதில் வேட்டியை ஊற வைத்து உலர வைப்பார்.

உலர்ந்தவுடன் அழகாக நீவி நறுவிசாக மடித்து வைத்து கட்டிக் கொள்வார். இந்த ரெண்டு செட்டு நைந்து போய் கிழிய ஆரம்பிக்கும்போது அடுத்து இரண்டு செட் வேஷ்டி ஜிப்பா வாங்கிக்கொள்வார்.

கைக்குட்டையும் கதரில் தான். எப்படி தெரியுமா?

நைந்து போன வேட்டிகள் இருக்குமே? அதில் நன்றாக இருக்கும் பாகங்களை ஒரே அளவில் சதுரம் சதுரமாக வெட்டுவார். அதை நானோ அல்லது என் சகோதரிகளோ தையல் மெஷினில் ஓரம் அடித்துக் கொடுத்தால் கைக்குட்டைகள் தயார். அவர் தேவைகளே மிகக் குறைவு. இதுதான் அவருக்கான மொத்தத் துணி செலவு.
இதை விட்டால் ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை போட்டுக்கொள்ளும் வெற்றிலை பாக்கு புகையிலை செலவுதான். வீட்டில் நான் தான் முதலில் வேலைக்கு போனேன். தொலைபேசி அலுவலகத்தில். நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஒரு தணியாத ஆசை இருந்தது. ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் சம்பள பணத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிட்டு கைச் செலவுக்கு அவசியமானது மட்டுமே பெற்றுக் கொள்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு என்னால் எதுவும் வாங்கி கொடுக்க இயலவில்லை. வேலைக்கு போய் சில மாதங்களுக்குப் பிறகுதான் அங்கே ஓவர்டைம் செய்யலாம் என்பதெல்லாம் தெரிந்தது. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் அன்று வேலை செய்தால் அதற்கு தனியாக ஊதியம் கிடைக்கும் . அந்தப் பணத்தை வீட்டில் கொடுக்காது சேமித்து வைத்து அதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு செட் டிரஸ் வாங்கினேன். அம்மாவுக்கு ஒரு காட்டன் புடவை அப்பாவுக்கு கதர் வேட்டி ஜிப்பா. தற்செயலாக அந்த மாதத்தில் அவர்களுடைய திருமண வெள்ளிவிழா வந்தது. மிகவும் ரகசியமாக துணிமணி வாங்கி வைத்து திருமண வெள்ளிவிழா தினத்தன்று அவர்களிடம் கொடுத்து நமஸ்கரித்த போது அவர்கள் கண்களில் ஈரப்பசையுடன் மின்னிய சந்தோஷம்….. மறக்க முடியுமா அதை?

” என் குழந்தை சம்பாதிச்சு வாங்கி கொடுத்தா” என்று அப்பா ரொம்ப நாட்கள் பெருமையாக தன் கதர் வேட்டி ஜிப்பாவை காட்டி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்று அகில இந்திய வேட்டி தினம்