இன்னொரு புத்தன் – II/ அதிரன்

ஒரு சாயங்கால வேளை
அலுவலக
சிற்றுண்டிசாலையில்
ஆழ்ந்த யோசனையில் நான் …
சட்டேன்று முன்னே தோன்றினான்
அந்த பொல்லாத ஆண்டி
இந்தமுறை கையில்
பேனாவுடன் …………

வீட்டுக்குப் போக
மனமில்லையோ ??
என்றான் ……………….

நாளை காலாண்டு முடிவு
கணக்குகள்
கொஞ்சம் பாக்கியிருக்கிறது
என்றேன் ………………..

லாபமா?? ……நஷ்டமா ??
என்றான் ……..

நானிருக்கும் வரை
லாபம்தான் என்றேன்…..

சரி இப்பொழுது
உன் கணக்கைக் கொஞ்சம்
எழுதுவோமா?? என்றான்
அந்த விவகார ஆண்டி

இன்று என்ன நாள் ??
என்றான் ….

தலைகுனிந்து
மெளனமானேன் ….

உன் திருமணநாள் என்றான் ….

காலையில் சேதி சொல்லவந்த
இல்லாளை இம்சித்தாயே
என்றான் ……

சரி போகட்டும்
நேற்று என்ன நாள் …
அதுவாது தெரியுமா ???
என்றான் அந்த விஷமக்கார ஆண்டி

மீண்டும் தலைகுனிந்தேன் ..

உன் செல்ல மகளின்
பிறந்தநாள் என்றான் …

நொறுங்கிப் போனேன் நான்….

முதலில் உன் குடும்பக்கணக்கை
ஒழுங்கா எழுது என்று
என் கையில் பேனா
ஒன்றைத் திணித்துவிட்டு
மீண்டும் ஆகாயத்தில் மறைந்து போனான்
அந்த விவகார ஆண்டி

அந்த பேனா மட்டும்
சாஸ்வதமாய் என் பூஜை அறையில்
புத்தனுக்குப் பக்கத்தில்
இனொரு புத்தனாய் எனக்கு ஒரு
போதி மரமாய் …..
, ஓசூர்