இருட்டில் ஏது நிழல் ?/ பாலசாண்டில்யன்

வெளிச்சத்தின் மறுபக்கம் இருட்டு !
இரண்டும் ஒரே நாணயத்தின் பக்கங்கள் !
இருட்டையும் ஒளியையும்
பிரித்துத் தான் பார்க்க முடியுமா ?
இருட்டை நிறைக்க ஒளி வருவதும்
ஒளியை மறைக்க இருட்டு வருவதும்
வாடிக்கையான வேடிக்கையே !

அறிவு அமைதி ஆனந்தம்
இல்லாத தருணங்கள் …
இருட்டையே வெளிச்சம்
போட்டுக் காட்டும் !
கவலை பயம் குழப்பம்
எல்லாமே இருட்டின்
வெவ்வேறு பெயர்களாக விளங்கும் !
தெளிவு துணிவு மகிழ்ச்சி
எல்லாமே வெளிச்சத்தின்
மறு வடிவங்கள் அன்றி வேறென்ன ?

மலையின் உயரம்
நதியின் தெளிவு
கடலின் ஆழம்
காட்டின் விசாலம்
பூமியின் பொறுமை
ஆகாயத்தின் அடர்த்தி
நெருப்பின் வேட்கை
அருவியின் துணிவு
மலர்களின் புன்னகை
மழையின் பெருந்தன்மை
மரங்களின் தியாகம்
பறவைகளின் யோகம்
எல்லாம் நமக்கு இருந்துவிட்டால்
இருட்டிலும் இறுமாப்புடன்
சிரிக்கும் வெளிச்சம் …!

எல்லாம் இருந்தும் இல்லாத
செழிப்பில்லா வறுமை என்பது
தான் இருட்டு …!
இல்லாத வெளிச்சத்தில்
இருக்கும் இருட்டில்
ஏது நிழல் ..?

கையிலெடு ஞானமெனும்
எரிதழல் …!
பாயட்டும் உலகெங்கும்
ஒளி வெள்ளம் …!!

2 Comments on “இருட்டில் ஏது நிழல் ?/ பாலசாண்டில்யன்”

Comments are closed.