
கதவைத் திறந்ததும் இளஞ்சூட்டோடு
காலை வெய்யில் என்னைத் தொட்டது.
இடது கையால் அதனை விலக்கி
நேற்றிரவு தொலைத்ததை
வலது கையால் தேடத் தொடங்கினேன்;
காலை வளர்ந்து முற்பகல் ஆனது
முற்பகல் முதிர்ந்து மாலை சூழ்ந்தது.
மாலை கனிந்து இளம் இரவானது.
இப்போது –
வலது கை வலித்தது;
இடது கையால் தேடத் தொடங்கினேன்.
கரங்கள் வலித்ததும் கால்களால் தேடினேன்;
கால்கள் வலித்ததும் கண்கள் செவிகள்
இரண்டையும் சேர்த்துக் கொண்டு
இரவெல்லாம் தேடிக்கொண்டிருந்தேன்
மறுநாள் காலை குளித்து மீண்டதும்
எதைத் தேடினேன் என்று
மறந்துபோய்விட்டது.
கதவைத் திறக்க உள்ளேவந்த
வெய்யிலை விலக்கி
வலதுகையால் தேடத் தொடங்கினேன்.
09/01/2022

அருமை
அடேயப்பா….