
‘ முட்டை போட்டுட்டு ஓடிட்டா அழகி ‘ என்று கத்தும் செல்வியை அதட்டி விட்டு வந்து பார்க்கிறாள் சரசு .ஆமாம் .அவர்கள் ஆசையோடு வளர்த்துவரும் கோழி ‘அழகி’ காலையிலிருந்து நிலைகொள்ளாமல் தவித்தாள். நீண்ட நேரம் மூலையில் உட்கார்ந்து இருந்துவிட்டு இப்போதுதான் ஓடினாள். அங்கே வெள்ளை நிற நீள் உருண்டையாக அதை விட்டு விட்டுச் சென்றிருந்தாள் . முட்டை பளபளத்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு தினசரி முட்டை உண்டு. வீட்டுக் குழம்போடு ஆம்லெட்டும் அவித்த முட்டையும் மணத்தன .
அடுத்த மாதம் இடும் முட்டைகளைக் குஞ்சு பொரிக்க எடுத்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் சரசு. தவிட்டுப் பானைக்குள் ஐந்து முட்டைகளையும் சிறகால் அணைத்தபடி வாரக்கணக்கில் அடைகாத்தாள் அழகி . சாப்பாடு தண்ணி எல்லாம் அந்த தவிட்டுப் பானைக்குள்தான். எப்போதாவது சென்று செல்வி எட்டிப் பார்க்கும் போது சிறகுகளை இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு முறைத்துப் பார்ப்பாள். ஒரு நாள் ‘கெக்கே’ சப்தம் சற்றுப் பலமாக ஒலிக்க, சென்று பார்த்தால், முட்டைக் கூட்டை உடைத்து வெளி வந்த வெள்ளை, பழுப்புக் குஞ்சுகள் விழுந்து எழுந்து தடுமாறிக் கொண்டு இருந்தன.
சேர்ந்தே கூட்டிக்கொண்டு போய் கால் கிளறி, மூக்கால் கொத்தி எடுத்துக்கொடுத்து குஞ்சுகளை அழகி வளர்த்த வந்த கலையே தனி. காக்கா, எலி எல்லாம் நெருங்கினால் சிறகை விரித்துப் பயமுறுத்தி சத்தம் கொடுத்து விரட்டி விடுவாள் . இரவில் சிறகுக்குள் மூக்கை நீட்டி கொண்டு, குஞ்சுகள் தூங்க, கழுத்தை வளைத்து நெளித்துக் கொண்டு கவனமாக இருப்பாள்.
வளர்ந்த குஞ்சுகள் தானாக இரை தேட ஆரம்பித்ததும் அவற்றைக் கொத்தி விரட்டி விடும் போது ‘அந்தத் தாயா இவள்’ என்று எண்ணத்தோன்றும். வயது ஏற ஏற தனிக்குடித்தனம் தள்ளிவிடும் விதமா அது. அழகிக்கும் அதிக வயதாவது தெரிந்தது சரசுக்கு. முட்டையிடும் பருவம் முடிந்து போனது. குப்பையைக் கிளறுவதிலும் வேகம் இல்லை. சீக்கிரமே ஓரமாய்ப் போய் உட்கார்ந்து கண் சிமிட்டிக் கொண்டு சொக்க ஆரம்பித்தாள்.
அழகியின் குஞ்சுகள் இப்போது முட்டையிட ஆரம்பித்து விட்டன . வீட்டில் முட்டைக் குழம்பு வாசம் இப்போது அடிக்கடி . அன்று வெளியூரிலிருந்து வந்திருந்த செல்வியின் அக்காவுக்கும் மாப்பிள்ளைக்கும் முட்டையோடு சேர்த்து அன்று கோழிக் குழம்பு .அந்தக் குழம்பு மிச்சத்தைக் கொல்லையில் கொட்டிய போது அதைக் கொத்தித் தின்பதற்கு அழகியின் குஞ்சுகள் போட்டி போட்டன.
—————நாகேந்திர பாரதி

So gradual….ஆனால் இடைவிடாமல், ஒன்றிலிருந்து ஒன்று, மாய்தல் முடிவல்ல ; மறுதுவக்கமே… கதையும், கருத்தும்! அருமை!
Thank you