
மலையும் நதியும்
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
மனதாரக் காத்திருந்தேன்
வரவில்லை நீ…
உனைப் பற்றிய தகவலும் தான்…
தென்றல் வந்தது
கொடி அசைந்தது
நீ வராது போனதால்
மனம் அசையாமல் அப்படியே நின்றது
மரத்தில் கட்டிய ஊஞ்சல் போல…
என் ஜனனமும் மரணமும்
உனைச் சார்ந்து தான்…
நீ இருந்தால் தான் பாட்டும் கவிதையும்
நீ இல்லாமல் எனக்குள் இயக்கமில்லை
‘வா’யெனச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை..
எனைச் சுற்றி நீ இருந்தால்
எல்லாம் எனக்கு வெற்றி
வரவில்லை நீ வெகு நேரமாகியும்
வரவில்லை எந்தன் நெஞ்சில் மூச்சும்…
வாய் நிறைய எந்தன் பேச்சும்..
பிரிவின் வலி அறியாதவர்
பரிவின் ஒலி புரியாதவர்
புன்னகை மறந்தவர்
எப்படி அறியக்கூடும் இந்த வலி…
இறங்காமல் அங்கே காத்திருப்பேன்
இரக்கமிருந்தால் ஏறி வா அன்பே…
நிலவு தெரிகிறது..
நிலவை நிலவென்று
சொல்ல மாட்டேன்…
உன் முகம் பார்த்த பிறகு…
வானவில்லாக வந்து போ
வண்ணம் சேர்க்க…என்
எண்ணம் கோர்க்க….
எனையே நான் உயிரோடு பார்க்க…!!
