
கொஞ்சம் கட்டாந்தரை.
பரவலாய் மணற்பரப்பு.
நடுவே குட்டிச்சுவர் .
மேற்கூரை கிடுகுச்சாரம்.
இரும்பு நெளித்தகட்டில்
சின்னதாய் புரொஜக்டர் அறை.
பெரிய அலுமினிய
அப்பளடப்பாக்குள் அடைபடலாய்
சுருள்பாம்பு படத்து ஃபிலிம்.
வெட்டியெறிந்த துண்டு ஃபிலிம்களில்
மக்கள் திலகமும்
நடிகர் திலகமும் படடைட்டில்
பெயர்வரிசையும்
ரீல் மாத்தச்சேர்த்து
நாலு இடைவேளையென
குண்டு பல்பு கண்சிமிட்டும்.
திரையின் பின்பக்கம்
பொது இயற்கை உபாதை கழிப்பிட
திறந்த நாற்ற நாசித் தொந்தரவு.
குவித்து மணல்கூம்பில்
துப்பிவைத்த எச்சில்
விட்டெறிந்த துண்டு பீடி.
திரைக்கு சற்று முன்னே
இருநிறத்து இரும்புவாளி
தோரணத்தில்
தீ விபத்து தணிக்க என
மணல் நீர் அலைவரிசை.
கருங்கல் தரை டிக்கட்டு.
சவுக்குக் கட்டைசுமக்கும்
சிறுபலகை இரண்டாம் வகுப்பு.
மர இரும்புச்சேரில் முதல் வகுப்பு
இன்னும் அரையடி தளம் உயர்ந்த
இடப்பிரிவில் முக்கியஸ்தர்
அமர்விடங்கள்.
பின் மண்டைச்சுவர் வழி
ஒளி உமிழ கூட்டம் பார்க்க
இரண்டாம் புரொஜக்டர் ஒளிதுப்ப
என மூன்று சிச்சதுரப் பொந்துகள்.
இருபுறமும் மேல்புறமும்
சர அடுக்காய் மூங்கில் கம்புகள்.
நான்கு பக்கமும் தென்னங்கிடுகுச் சுவர்.
நகரத்தின் வணிக வளாக
குளிர் திரை நான்கில்
குஷன் இருக்கையில்
குளிர் பரவ அமர்ந்து
படம் பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன்.
என் இதுவரை வாழ்வின்
சிறந்த படங்களை
அந்த கூரைக்கொட்டாய் கோவிலிலா
தரிசனம் கண்டுவந்தேன்.!?!!
