
எல்லாம் மறந்து விட்டது
ஆனால் அந்த நீல நிற வாளி மட்டும்
அப்படியே நெஞ்சில் நிற்கிறது
’அவனுடைய’ அம்மா என்ன செய்திருப்பாள் அதை?
விட்டு விட்டுப் போயிருப்பாளோ அப்படியே?
அவள் சீருக்கு கேட்டபடி வைத்த குடம்
எண்ணையை பிஸ்கெட் டப்பாவில்
கொட்டி சீல் வைக்கச் சொல்லி ரயிலில்
எடுத்துச் சென்றவளாயிற்றே
அவளுக்கு இது என்ன பெரிய சுமை?
குழந்தையை குளிப்பாட்ட வசதியாக
ஒரு வாளியில்லை என்று
’அவனி’டம் கெஞ்சி அனுமதி பெற்று
ஒரே சமயம் இரண்டு டப்பா சோப் பவுடர் வாங்கி
அத்துடன் இனாமாக வந்த வாளியை
கடைக்காரரிடம் நைச்சியமாகப் பேசி
பிரத்தியேகமாக அந்த நிறத்தில் தேர்ந்தெடுத்தேன்
- என் ஒரு வயது குழந்தைக்கு நீல நிறமென்றால் உயிர் –
அதில் நிற்க வைத்து குளிப்பாட்டினால்
அவளுக்கு பேரானந்தம்
அது அப்புறம் என்னவாயிருக்கும்?
‘போ, போ!’ என்கிற சொல் அலுத்துப் போய்
கட்டிய புடவையும் தூக்கிய குழந்தையுமாய்
கிளம்பினேன்
அம்மா பல வருடம் ஏசினாள்
‘இப்பிடி எல்லாத்தெயும் விட்டுட்டு வந்துருக்கெயே!’
அவள் வயிற்றெரிச்சல் அவளுக்கு
தங்கம், வெள்ளி, பித்தளை, ஸ்டீல்
-அம்மா வயிற்றை வாயை கட்டி சேர்த்தது-
எடுத்துப் போய் விட்டாளாம் மாமியார்காரி
பீரோ, கட்டில், சோபா, மெத்தை(யூ ஃபோம்)
அப்பாவின் பி. எஃப். பணத்தை முழுங்கியவை
பட்டியலிட்டு வாங்கினாள்
’ஒங்க பொண்ணுதானே ஆளப் போறா?’
எல்லாவற்றையும் பாதி விலைக்கு விற்றாளாம்
இதையெல்லாம் கேள்விப் பட்ட போது
நான் வருத்தப் படவில்லை
ஆனால் அன்றும்
அதன் பின் எப்பொழுதாவது ஒரு முறை
தோன்றும் அந்த கேள்வி
நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்
இப்பொழுதும்
சில சமயம் என் பேத்தியை குளிப்பாட்டுகையில்
தோன்றுகிறது
அந்த நீல நிற வாளி என்னவாயிருக்கும்?
