அவனின் அழைப்பு/ செல்விபிரகாஷ்

காட்டாறு எனையழைத்து
காதல் கதை சொல்கிறாய்
கணையாழி விரல் நுழைத்து
கடல்வரையில் இணைகிறாய்

தொடுவானத் தகிப்புயெனை
தருநிழலாய்த்தணிக்கிறாய்
தூவானம் எனையாக்கி
துவட்டிக்கொள்ள நினைக்கிறாய்

இரும்பதுவின் இறுக்கமெனை
இதழ் உலையில் இடுகிறாய்
இராமனின் வில்லாக்கி
இதயம்வரை வளைக்கிறாய்

பருவத்தைப் புதிராக்கி
புருவத்தை நெளிக்கிறாய்
பாஞ்சாலி துகில் என்னை
பாதம்வரை உரிக்கிறாய்

இராக்கோழி சத்தமெனை
இரகசியமாயழைக்கிறாய்
இராவணனின் இசையாக்கி
இராத்திரியில்புசிக்கிறாய்

          

One Comment on “அவனின் அழைப்பு/ செல்விபிரகாஷ்”

Comments are closed.