
உயிரோடு உலவும் உடல்களுக்கு
கல்லறைக்குள் இருந்து ஒரு கடிதம்
இங்கு எறும்பு கடிக்கும் போது
வலிக்கவில்லை
மண் வந்து மூக்கில் முட்டும்போது
திணறல் இல்லை
காட்சிகள் கண்களை
சிரமப் படுத்தவில்லை
மேலிருக்கும் சப்தங்கள்
கீழே இறங்குவதில்லை
கீழிறங்கும் தண்ணீரால்
தும்மல் வருவதில்லை
எங்கும் இருட்டு
எப்போதும் நிசப்தம்
மண்ணுக்குப் மக்கிப் போய்க்
கலக்கும் போது
தன்னை இழக்கும் சுகம்
கிடைக்கிறது
இறந்து போனதின் இன்பம்
இப்போது புரிகிறது
உங்களுக்கும் புரியும்
ஒரு நாள்
