அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்

உங்களில் எத்தனை பேருக்கு மும்பை மழைப்பொழிவின் இயல்பு தெரியும் என எனக்கு தெரியவில்லை எனது பணி காரணமாக ஒரு முறை சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.
அது ஒரு மும்பை மாரிக் காலம்.. துல்லியமாக ஜூலை மாத மும்பை மாரிக் காலம்.
மும்பையில் மழை எப்போதும் சல்லடை நீர் தாரகைகள் போல் சிறுசிறு துளிகளாய் பொழிந்து கொண்டே இருக்கும் .

மும்பை மழை உடலுக்கு எந்த ஊறும் விளைவிக்காது

நனையலாம் காயலாம் மீண்டும் நனையலாம் காயலம் என்பதே மும்பைக்கர்களின் மமழைக்கால நித்திய தாரக மந்திரம்.
ஒரு நாளின் பின்னந்திப் பொழுதில் நான் பெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்தேன்.
தாராவி பூமி எப்போதும் மழைப் பொழிவில் குளமாகிவிடும்
.மழைப்பொழிவு நேரத்தில் வெளியே நடக்க இயலாது .
நான் ஒரு மாதிரியாக சமாளித்து மூட்டு அளவு தண்ணீரில் நண்பரின் அலுவலகத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்து டாக்ஸி தேடினேன்.
அரை டாக்ஸி மூழ்கிய நிலையில் ஓரிரு டாக்சிகள் அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருந்தன
எனக்கு மட்டுங்கா ஸ்டேஷன் செல்ல வேண்டிய கட்டாயம்‌.
ஒரு ஐந்து அல்லது ஏழு கிலோ மீட்டர் தொலைவு பயணம்.
கண்ணில் பட்ட டாக்சிகளை கைகாட்டி பார்த்தேன் ..
ஒருவரும் நிற்கவில்லை.
நானும் அயராமல் கைகாட்டி கொண்டிருந்தேன்..
பெரு மழைப் பொழிவில் ஒரு டாக்ஸி டிரைவர் நிறுத்தினார்
எங்கு செல்ல வேண்டும் எனக் கேட்டார்
மட்டுங்கா என்றேன்.
ஏறுங்கள் என்று உள்ளிருந்து லாக் திறந்து கதவை திறந்து விட்டார்.
மழை ஈரத்தில் அவரை‌ உற்றுப் பார்த்தேன்.
மிகவும் முதியவர்
எண்பது வயது இருக்கும். எனக்கு ஆச்சரியம்
ஒரு பெரும் மழைப்பொழிவில் இளைஞருக்கே சாலை தெரியாது.
இவர் எப்படி வண்டி செலுத்தப் போகிறாரோ என்ற அச்சத்துடன் அமர்ந்திருந்தேன்.
அவர் கார் வண்டி ஓட்டத் துவங்கினார்.
வண்டி பெரு நீர்ப்பெருக்கை கிழித்துக் கொண்டு ஒரு ராக்கெட் போல சென்றது ஹெட்லைட் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.
எதிரில் பெரும் கங்கை நீர் ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது.
நிதானமாக அவர் வண்டியை ஓட்டினார்.
நான் அவரிடம் கேட்டேன் ..ஐயா எப்படி இந்த முதிய வயதில்… இரவு நேரத்தில் வண்டி செலுத்துகிறீர்கள்..
அவர் சொன்னார் என் வயிறு ஒரு முட்டாள்.அது என் வயது தெரியாமல் வேளைக்கு பசிக்கிறது..
எனக்கு நானே உழைத்து நானே உண்ண வேண்டும் என்ற வைராக்கியக் கொள்கை என்றார்
என்னால் பேச இயலவில்லை. நான் சிலையானேன்
ஏதோ ஒரு மோன உந்துதலில் தலையை மட்டும் ஆட்டினேன்.
அவர் பேச்சு பேச்சாக இருந்தாலும் சாலையை உற்று நோக்கி வண்டியைச் செலுத்திக் கொண்டு இருந்தார்.
மட்டுங்கா ஸ்டேஷன் வந்தது

மீட்டர் கிளோஸ் செய்துவிட்டு ..30 ரூபாய் கொடுங்கள் என்றார்
இந்த மழை பொழிவு அதிகமாக கொடுப்பதுதான் முறை என்று நான் 50 ரூபாயை நீட்டினேன்.
அவர் தன் ஈர பாக்கெட்டில் இருந்து 20 ரூபாயை என்னிடம் திரும்பக் கொடுத்துவிட்டு ‌ஓகே சாப் பார்க்கலாம் என்றார்
நான் சொன்னேன் ஐயா அந்த 20 ரூபாயும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்
அவர் சொன்னார் அது என் உழைப்புக்கு மேலான ஊதியம்‌
ஒருவகையில் பிச்சை போலாகி விடும் என சன்னமான குரலில் மிகவும் அடக்கமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்.
நான் உங்களுக்குசெலுத்தும் மரியாதையாக எடுத்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினேன்
வேண்டாம் சாப் அது நன்று இல்லை.
எனக்கு அல்லா ரக்கா உடலில் தெம்பையும் மனதில் உறுதியையும் கொடுத்திருக்கிறான்.
அதற்கு அவனுக்கு என் துவா. இயன்றால் எனக்காக துவா செய்யுங்கள்.. நீங்கள் இறங்கலாம் என்றார். அந்த நீண்ட தாடி தலையில் தொப்பி வைத்துக் கொண்டு இருந்த முஸ்லிம் பெரியவர் .
நான் மனதால்அவரின் தெரியாத பாதம் தொட்டு வணங்கி வண்டியிலிருந்து பூமியில் கால் வைத்தேன்
அந்த நீரை எடுத்து என் தலையில் தெளித்துக் கொண்டு நோக்கி நடந்தேன்.
அதுதான் மும்பை உழைக்கும் வர்க்க கெத்து..
அது வயதறியாது .. ஏன் நோய் நொடி கூட‌ தள்ளிவைத்து உழைக்கும்.. உழைக்கும்.. உழைத்துக் கொண்டே ஒரு நாள் அலுவலக இருக்கையிலே உயிர் கூடத் துறக்க அஞ்சாது ‌என்றென்றும் மும்பைக்கர் போற்றுதும். சிரம் வணங்குதும்.💐🙏🏻

8 Comments on “அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்”

  1. மிகச் சரியாக மும்பை பற்றிய அறிமுகம். மிகச் சரியான உதாரணம். அந்த டிரைவர் ஒரு முஸ்லீம் என்பது ஒரு தற்செயலான விஷயம். வேறு எவராக இருந்தாலும், இதே அனுபவம்தான் நேர்ந்திருக்கும். இந்தியா முழுவதிலும் மும்பை போல வேலை பண்பாடு( work culture) வேறு எந்த நகரத்திலும் இல்லை.

  2. ஓர் அனுபவத்தை மெய் சிலிர்க்கும் தரிசனம் ஆக மொழி பெயர்த்துள்ள எழுத்தும், அதில் கசியும் பேரன்பும், நேயமும் வணக்கத்திற்கு உரியது.

  3. ஹா…சில வரிகளில் சிறுகதையின் வேகத்தில் ஒரு நிகழ்வின் பகிர்வு! மும்பை மழையில் காரில் பயணித்து அந்த முதிர்ந்த உழைப்பாளியை தரிசிக்கும் உணர்வு! அருமை சந்துரு சார்!

  4. மும்பை டாக்ஸி ஓட்டுநரின் மதிப்பு உயர்வானது . அதை வெளிப்படுத்திய ஐயா சந்திரசேகரன் அவர்களின் வார்த்தைகளும் சொல்முறைமையும் இன்னும் அழகானவை .
    நன்றி ஐயா .

  5. பிரமாதம். அந்த பெரியவரின் எளிமை, நேர்மை, உழைத்து உண்ண வேண்டும் என்ற வைராக்கியம், போன்ற நல்ல குணங்களை மிகையின்றி சிக்கனமான சொற் பிரயோகத்தில் சொல்லி விட்டீர்கள். தொடர்ந்து உங்கள் மும்பை வாழ்க்கை அனுபவங்களை எழுதுங்கள் சார்.

  6. இது அன்றாடம் நான. உணர்ந்த அனுபுவம் , குறிப்பாக மாட்டுங்கா – வொர்லி செல்லும் பொழுதெல்லாம் .

    ஆனால் , சுப்பிரமணியன் சந்திரசேகரன் அழகாக எழுதியுள்ளார் 👏

Comments are closed.