
சங்கீதக் கச்சேரி
சபையில் நடக்கையிலே
கதவு ‘கிரீச்’ சிட்டால்
கோபம் எதற்கு ?
சுருதி சேர்ப்போ ?
சங்கீத ஞானமோ ?
அல்லது உந்தன்
தாளக் கொலைக்குத்
தண்டனையோ?
குழந்தை அழுதால்
குடிமுழுகிப் போனதுபோல்
விழுந்து விழுந்தடிக்கும்
விரசம் ஏன் ?
கொண்டு வந்துவிட்ட
குற்றம் மறைக்கவா?
நொண்டிச் சாக்குன்
நொள்ளை ரசிப்புக்கா?
காயும் வயிறோ ?
கானத்தின் மகிமையதோ ?
சேயின் சுகம்மறந்த
சிந்தனை வரட்சியோ?
யார் கண்டார் ?
இவ்வளவும் போகட்டும் :
இதற்குப் பதிலென்ன ?
கண்ணை அலையவிட்டுக்
காதில் பெரும்பாகம்
சுற்றுச் சளசள “ப்பில்
சுவையறிய விட்டதென்ன ?
சுதியா? இசைரசிப்பா?
கதியா ? கலைருசியா ?
காதில் பெரும்பாகம்
கடன் கொடுத்து
ஊராரின் வேஷத்தை
உரித்து ரகசியத்தை
நிர்வாணமாக்கி
நெஞ்சுலரும் பேய்மனத்தால்
ஆராய்ச்சி செய்ய
ஆடும் தலையெதற்கு ?
உன் வேஷம் இங்கே
உரிந்து விழுவதற்கு
என்னேரம் ஆகும் ?
ஏனிந்தப் பொய்ரசனை ?
